திரைப்பட பாணியில் தொடர் கைவரிசை முதியவர்களிடம் நூதன முறையில் நகை பறித்த ஆந்திர பெண் கைது: தப்பிய 2 பேருக்கு வலை

பெரம்பூர்: மாதவரம் பகுதியை சேர்ந்தவர் ஜூலியா ஜெயராஜ் (80). இவர், கடந்த 3ம்  தேதி பெரம்பூர் சர்ச் அருகே ஆட்டோவில் சென்றபோது, அவருடன் பயணித்த 3 பெண்கள், ஜூலியாவிடம் பேச்சுக்கொடுத்தபடி, ‘‘உங்களது கழுத்தில்  உள்ள செயின் அறுந்து விழுவது போல உள்ளது. அதை பத்திரமாக கழற்றி கையில் வைத்துக் கொள்ளுங்கள்,’’ என கூறியுள்ளனர். அதை நம்பிய ஜூலியா, தனது 3 சவரன் செயினை கழற்றி தனது பையில் வைத்துள்ளார்.  பின்னர் அவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது செயின் மாயமானது  கண்டு  அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், செம்பியம்  குற்றப்பிரிவு ஆய்வாளர் பரணி குமார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தார்.சென்னையில் சில இடங்களில் இதே பாணியில்  செயின் பறிப்பு சம்பவம்  நடந்திருப்பது போலீஸ் உயரதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. குறிப்பாக வளசரவாக்கம், வடபழனி, ஆவடி ஆகிய பகுதிகளில் இதேபோன்று நூதன முறையில்  முதியோர்களின் கவனத்தை திசை திருப்பி செயின் பறிப்பு நடந்தது தெரியவந்தது. சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை  ஆய்வு செய்ததில் 20 வயதிலிருந்து 30 வயதுடைய 3 பெண்கள் உருவம் பதிவாகி இருந்தது. அதை பெற்று விசாரித்தபோது, அந்த பெண்கள் ஆந்திர மாநிலத்தில்  பதுங்கி இருப்பது  தெரியவந்தது.

Advertising
Advertising

இதையடுத்து புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.  புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் செம்பியம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பரணிகுமார் உள்ளிட்ட போலீசார்  கடந்த 4 நாட்களுக்கு முன், ஆந்திர மாநிலம் சித்தூர் குப்பம் என்ற கிராமத்திற்கு சென்று அந்த பெண்களை தேடினர். அங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் திருட்டுத் தொழிலில் ஈடுபடுவது தெரிய வந்தது. வெளிமாநிலங்களுக்கு சென்று திருட்டு தொழிலில் ஈடுபடுவது மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்து  சொகுசு வாழ்க்கை வாழ்வதுமாக இருந்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து நீண்ட போராட்டத்திற்குப் பின் அந்த மூன்று பெண்களில் ஒருவராக அகிலா  (28) என்ற பெண்ணை போலீசார் பிடித்தனர்.  மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய  கனகா, அலமேலு  தலைமறைவாகினர்.பின்னர், அந்த ஊரில் இருந்து புறப்பட்டபோது, அப்பகுதி மக்கள்,  ஊர் தலைவர் அங்கு வந்து அந்த பெண்ணை அழைத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, லோக்கல் போலீசார் வந்து அனைவரையும் காவல் நிலையம்  அழைத்து  சென்று விசாரித்தனர். அதில் 3 பெண்களும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது. சுமார் பத்து மணி நேர போராட்டத்திற்கு பிறகு அகிலா என்ற பெண்ணை  மட்டும் தமிழக போலீசாருடன் அவர்கள் அனுப்ப  சம்மதித்தனர். தமிழக போலீசார் அகிலாவை அழைத்துக் கொண்டு சென்னை வந்தனர்.   நேற்று அவர் செம்பியம்  போலீசாரால்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஊர் தலைவன் பாதுகாப்பு

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியிலுள்ள குப்பம் கிராமத்தில் திருடுவதே பிரதான தொழில். அதற்கு ஊர் தலைவன் என்ற போர்வையில் ஒருவன் செயல்பட்டு வருகிறான். எங்கு எந்த மாநிலத்தில் சென்று எவ்வளவு திருடினாலும் அதில்  குறிப்பிட்ட சதவீதத்தை அவனுக்கு கொடுக்க வேண்டும். திருடுபவர்கள் எங்கேயாவது மாட்டிக் கொண்டால் அந்த தலைவன் அங்கு சென்று அவர்களை பெயிலில் எடுத்து வருவான். தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் வருவது போல  தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.  அப்பகுதியில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஊர் தலைவனை பிடித்தால் பல்வேறு திருட்டு சம்பவங்களில் துப்பு  துலங்கும் என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories: