தட்டுப்பாட்டை போக்க எகிப்து நாட்டு வெங்காயம்: செல்லூர் ராஜூ, கூட்டுறவுத்துறை அமைச்சர்

வெங்காயம் ஆண்டுக்கு ஆண்டு வழக்கமான விளைச்சல் தான் கண்டு வந்துள்ளது. இப்போது, பருவமழை காரணமாக நாடு முழுவதும் வெங்காய சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழைபொழிவால், அதிகமாக  அறுவடை ஆக வேண்டிய வெங்காயம் அதிக அளவில் அழுகி போய் விட்டது. இதனால், பல மாநிலங்களில் வெங்காய விளைச்சலை எதிர்பார்த்த அளவுக்கு காண முடியவில்லை. மேலும் அதனால் வரத்தும் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால், நாடு முழுவதும் வெங்காயத்திற்கு பற்றாக்குறை ஏற்படத் துவங்கியது; தமிழகத்துக்கு வெங்காயம் வரத்து முற்றிலும் குறைந்து விட்டது. குறிப்பாக, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சாதாரண காலகட்டங்களில் தினமும் 1,500 லோடு வெங்காயம் வந்து ெகாண்டிருக்கும். ஆனால், தற்போது வெறும் 10 லோடு முதல் 15 லோடு வெங்காயம் தான் வருகிறது. இந்த நிலை தான் தமிழகம் முழுவதும்; தமிழகத்துக்கு மட்டுமல்ல, பல மாநிலங்களுக்கும் இதே நிலை தான்.

 இயற்கை பாதிப்பின் காரணமாக வெங்காயம் விளைச்சல் கடுமையாக குறைந்துள்ளது. இதனால், தமிழகத்துக்கும் வரத்து கிடைக்காததால் பெரும் பாதிப்பு  ஏற்பட்டது. மக்கள் பாதிக்கப்படுவதை அறிந்து உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெங்காய பிரச்னை ஜனவரி மாதத்தில் சரியாகி விடும்.  அதுவரை விலையேற்றத்தை கட்டுப்படுத்த அதிரடியாக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வெங்காய தட்டுப்பாட்டை போக்க எகிப்து நாட்டில் இருந்து மத்திய அரசால் 6 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கான நடவடிக்கை மத்திய அரசு எடுத்துள்ளது. இதில், தமிழகத்துக்கு 500 மெட்ரிக் டன் அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக கூட்டுறவு சங்க மானியம் மூலம் அவசர கால நிதியை எடுத்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வெளிநாட்டு வெங்காயம் விரைவில் வந்து விடும்.    

தமிழக அரசு கொள்முதல் செய்யப்படும் வெங்காயம் குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அங்கிருந்தே, வெங்காயம் ஒரு கிலோ ரூ.66க்கு வாங்கப்படுகிறது. அந்த விலையை வைத்து தான் மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விலையேற்றம் கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.  பொதுவாக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக அரசே விற்பனை செய்கிறது. கோயம்பேடு காய்கறி சந்தை மூலம், வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வருகின்றனர். எனவே, அங்கு மானிய விலையில் வெங்காயம் தர வேண்டிய அவசியம் இல்லை.

 தற்போதைய நிலைமையை சமாளிக்கும் வகையில் இன்னும் ஒரு வாரத்துக்குள் வெங்காயம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு ரேஷன் கடைகள், பண்ணை பசுமை கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்ததாக மீண்டும் 500 மெட்ரிக் டன் மகாராஷ்டிராவில் இருந்து இறக்குமதி வெங்காயம் தமிழகத்துக்கு கொண்டு வரப்படுகிறது.  இதை வைத்து டிசம்பர் வரை நிலைமையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பருவகால சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் ஜனவரியில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு விடும். எனவே, ஜனவரி முதல் வெங்காய வரத்து அதிகரிக்கும். அப்போது வெங்காய பிரச்னை வெகுவாக குறைந்து விடும். வழக்கமான நிலைக்கு திரும்பி விடும். அதன்பிறகு தமிழகம் உட்பட நாடு முழுவதும் வெங்காய விலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் வரும் காலங்களில்  வெங்காயம் விலையேற்றத்தை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சந்தையில் வெங்காயத்தை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும். மக்கள் பாதிக்கப்படுவதை அறிந்து உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெங்காய பிரச்னை ஜனவரி மாதத்தில் சரியாகி விடும்.

Related Stories:

>