அமைச்சர் உதயகுமார் ‘பகீர்’ தகவல் 58ம் கால்வாய் உடைப்புக்கு எலி, பன்றிகள்தான் காரணம்

தேனி: எலிகளும், காட்டு பன்றிகளும் கரையை துளையிட்டதால் 58ம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதாக அமைச்சர் உதயகுமார் கூறினார். தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் இருந்து கடந்த 5ம் தேதி 58ம் கால்வாய்க்கு  தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம்  ஆண்டிபட்டி அருகே டி.புதூர் பகுதியில் 58ம் கால்வாய் கரை உடைந்தது. உடைந்த பகுதி வழியாக தண்ணீர் வெளியேறி பாசன நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. உடனடியாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

நேற்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் 58ம் கால்வாய் கரை உடைப்பு ஏற்பட்ட டி.புதூர் பகுதியில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது :தற்போது கரை உடைந்த இடத்தில் எலிகளும், காட்டுப்பன்றிகளும் கரையை துளையிட்டதால் தான் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.  பணி நிறைவடைந்ததும் தண்ணீர் திறந்து விடப்படும். மேலும், கரை உடைப்பால் வெளியேறிய வெள்ளநீரால் பாசன பயிர்கள் சேதமடைந்திருக்கிறது. இதற்கு மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் சேத மதிப்பு கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் காரை  பெண்கள் முற்றுகை: கரை உடைந்த பகுதியில் இருந்து புறப்பட்ட அமைச்சர் உதயகுமார் காரை, டி.புதூர் கிராம பெண்கள் வழி மறித்து முற்றுகையிட்டு, பஸ் வசதி, ரேஷன் கடை குறித்து புகார் கூறினார். தேனி கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உதயகுமார் உறுதி அளித்து சென்றார்.

Related Stories: