சாப்பாடு சரியில்லை என்ற தகராறில் தந்தையை வெட்டிக்கொன்ற மகன்: திருமங்கலத்தில் பரபரப்பு

அண்ணாநகர்: திருமங்கலம் வி.வி.கோயில் தெரு காந்தி நகர், பாடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பழனி (60). இவரது மகன் கருப்பையா (30). இவருக்கு திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால், கருப்பையா தனது தந்தையுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மதியம் வீட்டில் பழனி மற்றும் அவரது மகன் கருப்பையா ஆகியோர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சாப்பாடு சரியில்லை, என கருப்பையா தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு பழனி, இது என்ன ஓட்டலா?, இருப்பதை சாப்பிடு என தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மகன் கருப்பையா, தந்தையை சரமாரி தாக்கினார்.
Advertising
Advertising

பின்னர், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து தந்தையின் தலையில் சரமாரியாக வெட்டினார். பழனி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்து கருப்பையா தப்பி ஓடினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த பழனியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பழனி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக இருந்த கருப்பையாவை கைது செய்தனர். விசாரணையில், கருப்பையா சற்றுமனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. தந்தையை மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: