அமெரிக்க கடற்படை தளத்தில் கப்பல் மாலுமி திடீர் தாக்குதல்: இந்திய விமான படை தளபதி தப்பினார்

லாஸ் ஏஞ்செல்ஸ்: அமெரிக்காவின் ஹவாயில் உள்ள கடற்படை, விமான தளத்தில் நீர்மூழ்கி கப்பல் மாலுமி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய விமானப்படை தளபதி உயிர் தப்பினார். அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில், அமெரிக்காவின் மிக பிரமாண்டமான  ‘பியர்ல்’ கடற்படை தளமும், விமானப்படை தளமும் இயங்கி வருகின்றன. நேற்று முன்தினம் இந்த கடற்படை தளத்தின் தெற்கு நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் குண்டு பாய்ந்து 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், குண்டு பாய்ந்த சிலர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர், ‘யுஎஸ்எஸ் கொலம்பியா’ என்ற நீர்மூழ்கி கப்பலின் மாலுமி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஹோகன் கிட்லே கூறுகையில், “துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அதிபர் டிரம்ப் விரிவாக கேட்டறிந்தார். அங்குள்ள நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்,” என்றார். பியர்ல் கடற்படை விமானப்படை தளத்தில் தற்போது, இந்தோ-பசிபிக் விமான படை தளபதிகளுக்கான மாநாடு நடைபெற்றது. இதில், இந்திய விமானப் படை தளபதி ரகேஷ் குமார் சிங் பதாரியா தலைமையிலான குழு கலந்து கொண்டது. இங்கு துப்பாக்கிச்சூடு நடந்தபோது, இவர் அங்குதான் இருந்தார். ஆனால், அவரும்,  இந்திய குழுவினரும் பாதுகாப்பாக இருந்தனர்.

Related Stories: