15 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல்: எடியூரப்பா அரசு தப்புமா?...கர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு

பெங்களூரு:  கர்நாடகாவில் காலியாக உள்ள 17 சட்டமன்ற தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடக்கிறது. ஆட்சியை   தக்கவைக்க பா.ஜ. குறைந்தது 8  இடங்களிலாவது வெற்றி பெற வேண்டும். இதனால், எடியூரப்பா அரசு ஆட்சியை தக்க வைக்குமா என்ற பரபரப்பு   எழுந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் சட்டமன்றதேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.வுக்கு 104 இடங்களும், காங்கிரசுக்கு 79,   மஜத கட்சிக்கு 37 இடங்களும் கிடைத்தது. பா.ஜவை 1 சுயேச்சை ஆதரிக்கிறார்.  ஆனாலும் மெஜாரிட்டிக்கு தேவையான 113  இடங்கள் எந்த   கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதற்கிடையே அதிக இடங்களைபிடித்த கட்சி என்ற அடிப்படையில் பா.ஜவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தார்.   பா.ஜ.வை சேர்ந்த எடியூரப்பா  முதல்வராக பதவியேற்றார்.

மெஜாரிட்டி இல்லாத பா.ஜ.வை ஆட்சி அமைக்க அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து,   உச்ச நீதிமன்றம் 24 மணி நேரத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்டது. மெஜாரிட்டி இல்லை என்பதை தெரிந்து கொண்ட எடியூரப்பா தனது   முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து காங்கிரசும், மஜத கட்சியும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தது. மஜத தலைவர்   குமாரசாமி முதல்வரானார்.  இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்த் சிங் உள்பட 14 பேரும், மஜத கட்சிமாநில தலைவர் விஸ்வாத்   உள்பட 3 பேரும் தங்கள் கட்சிகளில் இருந்து ராஜினாமா செய்தனர்.

இதனால் இந்த கூட்டணி அரசு மெஜாரிட்டியை இழந்தது. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை மும்பையில் உள்ள ஓட்டலில் பாஜவினர் தங்க   வைத்தனர். அவர்களை மீண்டும் காங்கிரஸ், மஜத கட்சிக்கு கொண்டுவர தலைவர்கள் முயற்சி எடுத்தனர். ஆனால் பலிக்கவில்லை. எனவே   குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசும் மெஜாரிட்டியை இழந்தது. இதனால் மெஜாரிட்டியை நிருபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்   பேரில் சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது சபாநாயகர் ரமேஷ்குமார், எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்த 17 பேரையும் தகுதி   நீக்கம் செய்ததுடன் அவர்கள் இந்த சட்டமன்றத்தில் ஆட்சி காலம் (2023வரை) முடியும் வரை 17 பேரும் தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்து    தீர்ப்பளித்தார். இந்த நிலையில் குமாரசாமியும் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து   எடியூரப்பா முதல்வராக மீண்டும் பதவியேற்றார்.  இதற்கிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்ஏக்களும் உச்ச   நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் தங்களை தகுதி நீக்கம் செய்தது சரியில்லை என அறிவிக்க கோரியிருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி,    தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரிதான், ஆனால் அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது செல்லாது என அறிவித்தது.  இதைத்தொடர்ந்து  தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  தகுதி நீக்கம்  செய்யப்பட்ட 17 பேரில் 14 பேருக்கு மீண்டும் பா.ஜ. சார்பில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது. கர்நாடகத்தில் பா.ஜ. ஆட்சி தொடருமா  என்பதற்கு விடை  சொல்லும் தேர்தலாக இருப்பதால் கர்நாடகத்தில் இது பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.

15 தொகுதிகளில் 165 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. நாளை காலை 7 மணி முதல் மாலை 6   மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.  இதையொட்டி இன்று காலை 11 மணி முதல் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள்,  போலீசார்,   கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள  வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பபட்டனர். இந்த 15 தொகுதிகளில் உள்ள 4,185 வாக்குச்சாவடிகளில்   19 ஆயிரத்து 299  ஊழியர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள். தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எடியூரப்பா ஆட்சி தப்புமா?

 கர்நாடக சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 224. இதில் மெஜாரிட்டிக்கு 113 எம்.எல்.ஏக்கள்  வேண்டும். பா.ஜவுக்கு இப்போது 105   எம்.எல்.ஏக்கள் உள்ளனர். எனவே பா.ஜ. ஆட்சி நிலைக்க குறைந்தபட்சம் 8 எம்.எல்.ஏக்களாவது வெற்றி பெற்றாக வேண்டும். எனவே பாஜவும்,   முதல்வர் எடியூரப்பாவும், இந்த தேர்தலை கவுரவ பிரச்னையாக கருதி தீவிரமாக தேர்தல் பணியாற்றினர். வரும் 9ம் தேதி வாக்கு எண்ணிக்கை   நடக்கிறது.

அன்று மதியம் முடிவுகள் தெரிந்து விடும். ஏற்கனவே எடியூரப்பா 3 முறை முதல்வராக இருந்தார். ஒருமுறை 12 நாளும், இன்னொரு முறை 3   வருடமும், 3வதுமுறை சில நாட்களும் அவர் முதல்வர் பதவியில் இருந்தார். இப்போது 4வது முறையாக முதல்வர் பதவியில் உள்ளார். இந்த பதவி   நிலைக்க வேண்டுமானால் பா.ஜ. குறைந்தது 8 இடத்தில் வெற்றி பெற வேண்டும்.  பா.ஜ. ஆட்சி நிலைக்குமா, இல்லையா என்பது 9ம் தேதி தெரிந்து   விடும்.

Related Stories: