குடியுரிமை சட்ட திருத்தம், பட்டியலினத்தவருக்கு தனித்தொகுதி ஒதுக்கீடு மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே குடியுரிமை திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1955-ம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் குடிபெயா்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பார்சி இனத்தவா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதில், உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் 7 ஆண்டுகள் வசித்தாலே அவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்ற திருத்தம் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களும், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முந்தைய பாஜக கூட்டணி ஆட்சியின்போது, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய கூட்டத் தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. எனினும், வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த அரசியல் தலைவா்களும், மாணவா் அமைப்புகளும் இந்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இதனை காரணமாக வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தி வந்தார்.

இரு மசோதாக்களுக்கு ஒப்புதல்:

* இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. அதில், மக்கள் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது . இதையடுத்து, இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

* அதேபோல, மக்களவை, சட்டப்பேரவை தொகுதிகளில் பட்டியலினத்தவருக்கு தனித்தொகுதி ஒதுக்கீடு செய்வதை மேலும் ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. வரும் ஜனவரி மாதத்துடன் தனித்தொகுதி ஒதுக்கீடு முறை முடிவடைய உள்ள நிலையில், மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: