அந்தமான் கடல் பகுதியில் அத்துமீறி ஆய்வு செய்த சீன கப்பல் விரட்டியடிப்பு: இந்திய கடற்படை தகவல்

புதுடெல்லி: அந்தமான் கடல் பகுதியில் அனுமதியின்றி ஆய்வு செய்த சீன ஆராய்ச்சி கப்பல், எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டதாக இந்திய கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது. தென் சீன கடல் பகுதியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா, அடுத்ததாக இந்திய பெருங்கடல் பகுதியை குறிவைத்துள்ளது. இதற்கு இந்தியா பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. ஆனாலும், அவ்வப்போது, இந்திய பெருங்கடல் பகுதியில் இந்திய கடல் எல்லைக்கு அருகே அத்துமீறி நுழைந்து ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதை சீனா வழக்கமாக கொண்டுள்ளது.இதே போல், கடந்த வாரம் அந்தமான் கடல் பகுதியில் இந்திய எல்லைக்கு அருகே சீன ஆராய்ச்சி கப்பல் ஒன்று அனுமதியின்றி நுழைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருப்பதை இந்திய கடற்படை ரோந்து கப்பல்கள் கண்டறிந்தன. சீனாவின் இச்செயல் சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்ட விதிகளுக்குப் புறம்பானது.

எனவே, இந்திய கடற்படை எச்சரிக்கை செய்து, சீன ஆராய்ச்சி கப்பலை திருப்பி அனுப்பியதாக தற்போது தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், டெல்லியில், கடற்படை தளபதி கரம்பீர் சிங் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:தேச பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள இந்திய கடற்படை எப்போதும் தயார் நிலையில் உள்ளது. பிராந்தியத்தில் எந்த அண்டை நாடுகளின் நடவடிக்கையும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஒத்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து செயல்புரிய இந்தியா தயாராக உள்ளது.இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பிராந்தியத்தில் எப்போதும் 7 அல்லது 8 சீன கப்பல்கள் தென்படுகின்றன. கடந்த 2008க்குப் பிறகு இந்திய பெருங்கடலில் சீன கப்பல்கள் அதிகளவில் நிலைநிறுத்தப்படுகின்றன. அவர்களை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.  நமது எல்லை அருகே உள்ள வேறு நாடுகளின் செயல்பாடுகளை இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணிக்கும். பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதற்கான தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

3 விமானம் தாங்கி போர்கப்பல்

கடற்படை தளபதி கரம்பீர் சிங் கூறுகையில், ‘‘கடற்படையில் 3 விமானம் தாங்கி போர் கப்பல் கொண்டிருப்பதே எங்களின் நீண்ட நாள் திட்டமாகும். இதில், மிக்-29கே விமானங்களை கொண்ட, உள்நாட்டில் தயாரான முதல் விமானம் தாங்கிக் போர் கப்பல் 2022ல் முழுமையான செயல்பாட்டில் வரும். கடந்த 5 ஆண்டில் கடற்படையின் ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீடு 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைந்துள்ளது. சீனா அவர்களின் திறனுக்கேற்ப கடற்படையை விரிவுபடுத்துகிறது. அதேபோல், இந்தியாவும் தனது திறனுக்கேற்ப விரிவுபடுத்துகிறது,’’ என்றார்.

Related Stories: