இன்னிங்ஸ் தோல்வி தவிர்க்க போராடுகிறது பாகிஸ்தான்

அடிலெய்டு:  ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்டில் (பகல்/இரவு), பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 302 ரன் எடுத்திருந்தது. மார்னஸ் லாபஸ்ஷேன் 162 ரன், டேவிட் வார்னர் 335*ரன், ஸ்மித் 36, மேத்யூ வேடு 38* ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 2ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 96 ரன் எடுத்திருந்தது. பாபர் ஆஸம் 43 ரன், யாசிர் ஷா 4 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 105 ரன் சேர்த்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாபர் ஆஸம் 97 ரன் எடுத்து (132 பந்து, 11 பவுண்டரி) ஸ்டார்க் வேகத்தில் கீப்பர் டிம் பெய்ன் வசம் பிடிபட்டார். ஷாகீன் அப்ரிடி 0, முகமது அப்பாஸ் 29 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

8வது வீரராகக் களமிறங்கி அபாரமாக விளையாடிய யாசிர் ஷா 113 ரன் (213 பந்து, 13 பவுண்டரி) விளாசி கம்மின்ஸ் வேகத்தில் லயன் வசம் பிடிபட, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 302 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (94.4 ஓவர்). ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ஸ்டார்க் 6, கம்மின்ஸ் 3, ஹேசல்வுட் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 287 ரன் பின்தங்கிய நிலையில் பாலோ ஆன் பெற்ற பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. இமாம் உல் ஹக் 0, கேப்டன் அசார் அலி 9, பாபர் ஆஸம் 8 ரன்னில் ஆட்டமிழந்தனர். இன்னிங்ஸ் தோல்வி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன் எடுத்துள்ளது. ஷாம் மசூத் 14, ஆசாத் ஷபிக் 8 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

Related Stories: