மோடி 2.0 அரசின் 6 மாத சாதனை காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்துள்ளது: மத்திய அமைச்சர் ஜவடேகர் பட்டியல்

புதுடெல்லி : மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தொடர்ந்து 2வது முறையாக கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றது. மோடி 2வது முறையாக பிரதமரமாக பதவியேற்றார். இந்த ஆட்சியின் 6 மாத காலம் நேற்று நிறைவடைந்தது. இதை முன்னிட்டு, அரசின் சாதனைகளை டிவிட்டர் மூலமாகவும், நேரடியாகவும் அமைச்சர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். டெல்லியில் உள்ள பாஜ தலைமையகத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் ஜவடேகர் அளித்த பேட்டி: பிரதமர் மோடி தலைமையிலான 2வது ஆட்சியின் முதல் 6 மாதத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளை அரசு எடுத்துள்ளது.

குறிப்பாக, காஷ்மீரில் சட்டப்பிரிவு 370,   35ஏ ஆகியவை நீக்கப்பட்டு, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு அமைதி திரும்பி வருகிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு கடந்த 4 மாதத்தில் காஷ்மீரில் தீவிரவாதம் பெருமளவில் குறைந்துள்ளது. முன்பு அங்கு தீவிரவாதம் ஆதிக்கம் செலுத்திய நிலையில், தற்போது அங்குள்ள நிலைமை வியத்தகு மாற்றத்தை கண்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதேபோல், நாட்டு நலனுக்காகவும் பாதுகாப்பை பலப்படுத்தவும் ரபேல் விமானத்தை கொண்டு வந்தது, பாதுகாப்பு உபகரணங்களை வாங்க நடவடிக்கை எடுத்தது என பல்வேறு முக்கிய முடிவுகளை பாஜ அரசு எடுத்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை, இந்தியாவிலும் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும், பொருளாதாரத்தை மீட்டு வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. வங்கிகள் இணைப்பு, தொழில் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி, பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை மற்றும் குறைவான நிறுவன வரி என உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன.

முத்தலாக் தடை விதித்து முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அயோத்தி தீர்ப்பு வெளியான போதுகூட அனைத்து மதத்தினரும் மிகுந்த அமைதியை கடைபிடித்தனர். பிரதமர் மோடியின் பல்வேறு வெளிநாட்டு பயணங்களால் இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வை வலுவடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

‘நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன’

தனது 6 மாத ஆட்சியின் சாதனையை விளக்கி, டிவிட்டர் பக்கத்தில் `கடந்த 6 மாதங்களாக இந்தியா முதலில்’ என்ற ஹேஷ்டேக்கை பிரதமர் மோடி வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், `இந்த ஆட்சியில் நாட்டின் வளர்ச்சிக்கான பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. புதிய வளர்ச்சி அடைந்த, வளம் நிறைந்த இந்தியாவை உருவாக்க இனிவரும் காலங்களில் இன்னும் எவ்வளவோ முன்னேற்ற நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு ஆர்வத்துடன் காத்திருக்கிறது. 130 கோடி இந்தியர்களின் ஆசிர்வாதத்துடன், அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக, புதுப்பிக்கப்பட்ட புத்துணர்வுடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து செயல்படும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: