பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது

சென்னை: செங்குன்றம் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை தனிப்படை உதவி ஆய்வாளர் பாக்யராஜ் செங்குன்றம், கட்டபொம்மன் தெருவை சேர்ந்த ஜெரோம் குழந்தை (20) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

இவர் அப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் செங்குன்றம், மாணிக்கனார் தெருவை சேர்ந்த ஜோதிலிங்கம் (56), பவானி நகரை சேர்ந்த மோகன் (24) ஆகிய இருவரையும் பிடித்தனர். இவர்கள் 3 பேரும் ஆந்திர மாநிலம், சூலூர்பேட்டையில் கஞ்சா வாங்கி வந்து, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா பொட்டலங்களாக விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 10 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களை நேற்றிரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: