மெடிக்கல் ஸ்டோரில் ஊசி போடப்பட்ட டெங்கு பாதித்த பிளஸ்2 மாணவி பலி

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி 8வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன்(49). இவரது மகள் ஸ்வேதா(16). அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிக்குள்ளாகி வந்த ஸ்வேதாவை பெற்றோர் அருகில் உள்ள மெடிக்கல் ஸ்டோருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, ஜெயபால் என்பவர் இடுப்பில் 2 ஊசி போட்டுள்ளார். ஆனால், ஸ்வேதாவுக்கு காய்ச்சல் குறையவில்லை. தொடர்ந்து ஜெயபால் ஊசி போட்ட இடத்தில் கருப்பாக கட்டி போல் இருந்துள்ளது. இதையடுத்து, அவரை கெங்கவல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மாணவிக்கு கட்டியை அப்புறப்படுத்த சிகிச்சை அளித்தனர். பின்னர் காய்ச்சல் குறையாத காரணத்தால் அவருக்கு பல்வேறு மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டது. இதில் அவருக்கு டெங்கு அறிகுறி உள்ளது உறுதி செய்யப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேலத்தில் ஸ்வேதாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டி அகற்றப்பட்டது. பின்னர், அவசர சிகிச்சை பிரிவில் மாணவிக்கு டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ஸ்வேதா உயிரிழந்தார்.

Related Stories: