சிறுமிகள் மாயமான விவகாரம் நித்யானந்தா ஆசிரமத்தில் இரண்டு நாட்களாக சோதனை: குஜராத் போலீசார் அதிரடி

பெங்களூரு: 4 சிறுமிகள் மாயமான விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து குஜராத் போலீசார் கடந்த இரு தினங்களாக பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் சோதனை மேற்கொண்டனர். பெங்களூரு அருகே பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில், நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனிடையே பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் தனது மகள்களை மீட்டுத்தரக்கோரி குஜராத் போலீசில் புகார் அளித்தார். மேலும், அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய அகமதாபாத் நீதிமன்றம் சிறுமிகளின் நிலை என்னவென்பதை கண்டறிந்து தகவல் தெரிவிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று முன்தினம் குஜராத் போலீசார் கர்நாடகாவின் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை நேற்றும் 2வது நாளாக தொடர்ந்தது. காணவில்லை என்று கூறப்படும் சிறுமிகள் குறித்து போலீசார் அப்போது விசாரணை மேற்கொண்டனர். நேற்று பிற்பகல் ஒரு மணி வரை தொடர்ந்த இந்த சோதனைக்கு பிறகு, குஜராத் போலீசார் அகமதாபாத்துக்கு திரும்பினர். ஆனால், நித்யானந்தா ஆசிரமத்தில் மேற்கொண்ட சோதனை குறித்து போலீசார் எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டனர். இதனால், சிறுமிகள் ஆசிரமத்தில் இருக்கிறார்களா? இல்லையா என்பது குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை.

Related Stories: