லட்சத்தீவு பகுதியில் நாளை உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு நிலை.. தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை : லட்சத்தீவு பகுதியில் நாளை உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை முதல் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 40ல் இருந்து 50கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க குமரி, மாலத்தீவு கடல்பகுதிகளுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழையும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ததாகவும் குறிப்பிட்ட அவர், லட்சத்தீவு பகுதியில் நாளை உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் தலைஞாயிறு 16 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மேலும் மயிலாடுதுறையில் 14 செ.மீ. மழையும்,புதுக்கோட்டை மற்றும் கொடவாசல்  பகுதியில் தலா 13 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை அரியலூரில் 352 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக சென்னையில் 417 மி.மீ. கோவை 389 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமான வெப்பநிலை 31 டிகிரி செல்ஷியஸும் குறைந்தபட்சமான வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: