நாங்குநேரி இடைத்தேர்தலுக்குப் பின் கிராமங்களில் மாயமான அரசு பஸ்கள்: எண்ட் டூ எண்ட், பைபாஸ் ரைடர் இயக்க அனுமதி கிடையாது

நாங்குநேரி: நடந்து முடிந்த நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலையொட்டி பல்வேறு கிராமங்களில் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் போதிய பஸ் வசதி இல்லை என தேர்தல் பிரசாரத்திற்கு வந்த அமைச்சர்களிடம் நேரடியாக அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அமைச்சர்களின் தலையீட்டின் பேரில் போக்குவரத்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிறுத்தப்பட்ட கிராமப்புற பஸ்களை உடனே இயக்க வாய்மொழியாக உத்தரவிட்டனர் இதனையடுத்து பல ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட கிராமப்புற அரசு பஸ்கள் அவசர அவசரமாக கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்டன. தங்கள் ஊர்களுக்கு காணாமல் போன பஸ்கள் வந்ததை அப்பகுதியினர் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். இந்நிலையில் தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே திடீரென இயக்கப்பட்ட பெரும்பாலான கிராம பஸ்கள் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வெளியூர் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்கள் ஒன் டூ திரி, எண்ட் டூ எண்ட், பைபாஸ் ரைடர் என பல்வேறு பெயர்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பொன்னாக்குடி, மூன்றடைப்பு, பாணான்குளம், நாங்குநேரி, தளபதிசமுத்திரம், வள்ளியூர், தெற்கு வள்ளியூர், பணகுடி மற்றும் பல்வேறு கிராமங்களின் பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் பைபாஸ் வழியாக அரசு பஸ்கள் தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை புது பஸ் ஸ்டாண்டில் பெரும்பாலான பஸ்கள் பைபாஸ் சர்வீசாக இருந்த நிலையில் நாங்குநேரி செல்வதற்காக காத்திருந்த பயணி ஒருவர் பஸ் கிடைக்காமல் விரக்தியில் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலரை தொடர்பு கொண்டு செல்போனில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் பதில் கூறும் போது, ‘ஒன் டூ திரி, பைபாஸ்ரைடர் என பல்வேறு பெயர்களில் அரசு பஸ்களை பைபாஸ்களில் இயக்க அனுமதி இல்லை. எந்த பஸ்சிலும் ஏறிச்செல்லலாம் என தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து பணிமனை அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு அந்த பயணியிடம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவிக்கிறார். அதனைத் தொடர்ந்து அந்த பயணியும் நாகர்கோவிலில் உள்ள அரசு பணிமனை மேலாளரை போனில் தொடர்பு கொண்டு இதுகுறித்து கேள்வி கேட்கிறார். அதற்கு பஸ் ஸ்டாண்டில் உள்ள அவரை அழைத்து அந்தப்பயணியை வேறு பஸ்சில் செல்ல அறிவுறுத்துமாறு கூறுவதுடன் எப்படியாவது அவரை சமாளியுங்கள் என்றும் தெரிவிக்கிறார். இந்த போன் உரையாடல்களை பதிவு செய்த பாதிக்கப்பட்ட பயணி வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளார். இது நாங்குநேரி பகுதியில் வைரலாக பரவி வருகிறது. அரசு அனுமதி இல்லாமல் அரசு பஸ் கிளை மேலாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு அரசு பஸ்களை இயக்கி வருவதையும், அதனை போக்குவரத்து அதிகாரிகள் தடுக்க முன் வராததையும், இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதையும் வாட்ஸ்அப் ஆடியோ நிரூபித்து வருவதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். எனவே அரசு பஸ்களை முறைப்படி குறிப்பிட்ட வழித்தடங்களில் பொதுமக்கள் நலன் கருதி இயக்க நடவடிக்கை வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: