திருப்பூரில் பார் ஏலம் விடுவதில் முறைகேடு; கூச்சல், குழப்பத்தால் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 236 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் செயல்படும் பார்களுக்கான ஏலம் 22ம் தேதிக்கு அறிவிக்கப்பட்டது. இதனால், நேற்று ஏலம் எடுக்க அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் அங்கேரிபாளையம் ரோட்டிலுள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

ஆனால் டாஸ்மாக் நிர்வாக மாவட்ட மேலாளர் ஏலம் விடும் இடத்திற்கு வரவில்லை. மதியம் 12 மணி வரை விண்ணப்பங்களை வழங்காமல் இழுத்தடித்துள்ளனர். இதனால் ஏலம் எடுக்க வந்ததவர்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்தனர். ஆனால் சில நபர்கள் மட்டும் விண்ணப்ப படிவத்தோடு அலுவலகத்திற்குள்ளே சென்று வருவதை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குணசேகரனுக்கு அ.தி.மு.க.வினர் தகவல் அளித்தனர். தகலறிந்த குணசேகரன் சம்பவ இடத்திற்கு வந்து திருப்பூர் வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையில் அலுவலகத்திலிருந்த அலுவலர் பழனிகுமாரின் பீரோவை திறந்து சோதனையிட்டனர். அப்போது, முறைகேடாக பெறப்பட்ட 25 பார்களுக்கான விண்ணப்பம் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து பழனிகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு கடும் கூச்சல் குழப்பம் நிலவியது.

பின்னர் முறைகேடு குறித்து நாளை (இன்று) மாவட்ட கலெக்டரிடம் மனு அளிப்பதாகவும், மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் டெண்டர் மோசடி குறித்து வழக்கு தொடுப்பதாகவும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கூறிவிட்டு சென்றார். இதுகுறித்து டாஸ்மாக் அலுவலர் பழனிகுமாரிடம் கேட்டபோது, ‘நான் மதியம் உணவு இடைவேளைக்கு சென்று விட்ட சமயத்தில் அலுவலகத்தில் உள்ள பீரோவில் யாரோ பூர்த்தி செய்த போலியான விண்ணப்பங்களை வைத்து சென்றுள்ளனர். டாஸ்மாக் மாவட்ட மேலாளரே வராத இடத்தில் எப்படி ஏலம் நடக்கும்? விண்ணப்ப படிவங்களை நான் வைக்கவில்லை’ என்று சொன்னார்.

Related Stories: