கொளக்குடி ஊராட்சியில் சாலை வசதியின்றி 10 ஆண்டாக தவித்து வரும் கிராம மக்கள்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த கொளக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஜாகீர்உசேன் நகர் மற்றும் ஜம்ஜம் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 5000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உட்பட இதர பிற சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அப்பகுதியில் உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட தெருக்கள் சாலை வசதிகள் இன்றி காணப்படுகின்றன. மிகவும் தாழ்வான பகுதியாக கருதப்படும் ஜாகீர்உசேன் நகரில் ஏற்கனவே இருந்த பிரதான தார் சாலை பல்வேறு காலக்கட்டங்களில் பெய்த மழையினால் சேதமானது.

இதனால் 12 அடிகள் உள்ள சாலை 4 அடியாக குறுகியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் செல்லும் பள்ளி வாகனங்கள் வேறு பாதையின்றி மிகவும் ஆபத்தான வகையில் சாகச பயணங்களை மேற்கொள்கின்றன. இதுகுறித்து கொளக்குடி முஸ்லிம் ஜமாஅத் தலைவர் நூர்முகம்மது கூறுகையில், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட பிரதான தார்சாலை தற்போது முற்றிலுமாக சேதமடைந்து உள்ளளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.

புதிய சாலைகள் அமைக்ககோரி ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் முதலமைச்சரின் மக்கள் குறைதீர்ப்பு வரை கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை.மேலும் இப்பகுதியை கடந்து பாசனத்திற்கு செல்லும் கெண்டி வாய்க்காலில் 2 கிலோ மீட்டர் வரை குடியிருப்பு வாசிகள் கழிவுநீரை திறந்துவிடுவதால் வாய்க்கால் தண்ணீர் மாசு அடைந்து மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபோன்ற சுகாதார சீர்கேடு குறித்து ஊராட்சி செயலருக்கு தெரியப்படுத்தியும் எந்த பயனும் இல்லை. இதனால் தற்போது மர்ம காய்ச்சல் இப்பகுதியில் அதிக அளவில் பரவி வருகின்றது. மேலும் தனிநபர் கழிப்பிடம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் வீடு கட்டும் திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றார்.

இதுகுறித்து சமூகஆர்வலர் ஜூவைதா பேகம் கூறும்போது, அரசு தொடக்கப்பள்ளிகள், தனியார் பள்ளி மற்றும் அரபு கல்லூரி உள்ளிட்டவைகளுக்கு அன்றாடம் செல்லும் மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். சாலை சேதமடைந்து அகலம் குறைந்து உள்ளதால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி கெண்டிவாய்க்காலில் விழும் அபாயம் அவப்போது நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்தால் ஊராட்சியில் அதற்கான திட்டங்கள் தற்போது இல்லை. தற்காலிக நடவடிக்கைகளுக்கு ஊராட்சியில் நிதி இல்லை என தெரிவிக்கின்றனர்.

 எனவே குடியிருப்பு வாசிகளுக்கு அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன் சேதமடைந்த சாலைகளை சிமெண்ட் கலவைகள் கொண்டு தற்காலிகமாக சரிசெய்ய வேண்டும் என்றும், கெண்டி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி 2 கி.மீ வரை  தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்தார்.

Related Stories: