ஒரு பில்லியன் டாலர் மதிப்பில் கடற்படை ஆயுதங்கள்: இந்தியாவிற்கு வழங்க அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

வாஷிங்டன்: இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள 13 கடற்படை துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் வண்ணம் போர்க்கப்பல்களில்  பயன்படும் விமான எதிர்ப்பு பீரங்கிகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்க சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்படி 5 அங்குல விட்டம் கொண்ட 13 எம்கே 45 ரக பீரங்கிகளை இந்தியாவுக்கு விற்பனை  செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிற்கு 13 எம்.கே.45 ரக கடற்படை துப்பாக்கிகள் மற்றும் ராணுவ உபகரணங்களை விற்பனை செய்ய ஒப்புதல்  அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள், உதிரி பாகங்கள், அவற்றை கையாள்வதற்கான பயிற்சி, தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த ராணுவ வியாபாரம் மூலம் தங்கள் நாட்டின் வெளியுறவு கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தவகை ஆயுதங்கள் தற்போதைய மற்றும் எதிர்கால  அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் திறனை இந்தியாவுக்கு வழங்கும் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு மையம் கூறியுள்ளது. இதன் மூலம் இந்தியாவும், அமெரிக்காவும் பரஸ்பரம் நட்பை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்  என்றும் என அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

Related Stories:

>