அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் வறண்டது கொரட்டூர் ஏரி: கழிவுநீர் கலப்பதால் கண்கலங்கும் மக்கள்

அம்பத்தூர்: சுமார் 850 ஏக்கர் பரப்பளவு கொண்ட சென்னை கொரட்டூர் ஏரி பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கொரட்டூர் கள்ளிக்குப்பம், மேனாம்பேடு, கருக்கு மற்றும் மாதனங்குப்பம் பகுதி மக்களுக்கு நீராதாரமாக விளங்கி வருகிறது. தற்போது ஏரியில் கழிவுநீர் கலந்துவிட்டதால் தண்ணீர் மாறிவிட்டது. குறிப்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலை, ஏற்றுமதி ஆடை நிறுவனங்கள் மற்றும் ஆவின் பால் பண்ணை ஆகியவற்றில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுநீர் ஏரிக்கு செல்லும் மழை நீர் கால்வாயில் விடப்படுகிறது. இதனால், ஏரி நீர் ரசாயனம் கலந்த நீராக மாறி மீன்கள் அடிக்கடி இறந்துவிடுகிறது. நீரை குடிக்கும் கால்நடைகளும் பாதிக்கப்படுகிறது.

Advertising
Advertising

இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுக்கு முன்பு சமூக ஆர்வலர்கள் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருப்பினும் கழிவுநீர் விடுவது நிறுத்தப்படவில்லை. பொதுமக்கள் கோரிக்கை அடிப்படையில், கடந்த மாதம் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சண்முகம், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வடிகால் துறை நிர்வாக இயக்குனர் பிரபு சங்கர், பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் முத்தையா, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் இந்திரா ஆகியோர் ஏரியை பார்வையிட்டனர். இதன்பிறகு கருக்கு, டி.டி.பி காலனி பகுதியில் உள்ள ரசாயன கழிவுநீர் கலந்த மழைநீர் கால்வாயை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து மழைநீர் கால்வாயில் உள்ள ரசாயனம் கலந்த கழிவு நீரை 15 நாட்களுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், இதுவரை ஏரியில் சுத்திகரிப்பு செய்து தண்ணீர்விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்ைல. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது; சமீபத்தில் பெய்த மழையால் அம்பத்தூர், அயப்பாக்கம், ஆவடி ஏரிகள் நிறைந்து உபரிநீர் கொரட்டூர் ஏரிக்கு வரவேண்டும். ஆனால், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள கால்வாயில் ரசாயன கழிவுநீர் வருவதால் கொரட்டூர் ஏரிக்கு தண்ணீர் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக உபரி நீரை கொரட்டூர் ஏரியில் விட முடியவில்லை.

இதனால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வில்லிவாக்கம், ஓட்டேரி வழியாக கடலில் வீணாக கலக்கிறது. கழிவுநீரை சுத்திகரிப்பு செய்துவிட்டு இருந்தால் கொரட்டூர் ஏரி நிரம்பியிருக்கும். அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏரி வறண்டு கிடக்கிறது. கழிவுநீர் கலப்பதால் வேதனையாக உள்ளது.இனிமேலாவது அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு கொரட்டூர் ஏரிக்கு கால்வாய் வழியாக வரும் கழிவுநீர் கலந்த மழைநீரை சுத்திகரிப்பு செய்து ஏரிக்குவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: