ஜேஎன்யூ மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்: மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கு ஜேஎன்யூ தலைவர் கடிதம்

டெல்லி: ஜேஎன்யூ மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கு ஜேஎன்யூ தலைவர் கடிதம் எழுதியுள்ளார். கல்வி மற்றும் விடுதி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பேரணியாக சென்ற மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மாணவர்கள் கல்வி மற்றும் விடுதி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரைவு விடுதி நடத்தை விதிகளை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 20 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து கட்டண உயர்வை ஒரு பகுதியாக அரசு திரும்ப பெற்றது. எனினும் முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் பேரணியாக செல்ல முயன்றனர்.

அவர்களை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி தடியடி நடத்தியதுடன், சுமார் 100 மாணவர்களை தடுப்பு காவலில் வைத்துள்ளனர். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக நாடாளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள 4 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டன. இந்த சூழலில் மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் வகையில் 3 பேர் கொண்ட குழுவை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்தது. இந்த குழுவிடம் குறைகளை தெரிவித்து மாணவர்கள் தங்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. எனினும் சமாதானம் அடையாத மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பு காவலில் பிடிக்கப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கல்வி மற்றும் விடுதி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கு பல்கலைக்கழக தலைவர் கடிதம் எழுதியுள்ளார். மனிதவள மேம்பாட்டு துறைக்கு பல்கலைக்கழக தலைவர்  அயிஷி கோஷ் எழுதியிருக்கும் கடிதத்தில், தற்போது எழுந்திருக்கும் பிரச்சனையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கல்வி மற்றும் விடுதி கட்டண உயர்வு ஏழை, எளிய மாணவர்களை வெகுவாக பாதிக்கும் என்பதால் அதனை திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனை தீர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடிக்கு பகுஜன் சமாஜ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories: