நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு தேர்தல் ஒத்துழைக்காத விஏஓக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் எட்டிமங்கலத்தை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.  இதேபோல், அய்யாத்துரை மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரும் மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல் ஆனந்தமுருகன் ஆஜராகி, ‘‘தேர்தல் நடவடிக்கைகள் முடிந்து, நவம்பர் முதல் வாரத்தில், புதிய நிர்வாக குழுவின் முதல் கூட்டம் நடக்கும் என ஏற்கனவே இந்த நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தேர்தலுக்கான எந்த நடவடிக்கையும் இல்லை’’ என்றார்.

அப்போது பொதுப்பணித்துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘வாக்காளர் பட்டியல் இறுதி செய்யும் பணி 90 சதவீதம் முடிந்து விட்டது. இந்த பணியை முடிக்க சில இடங்களில் விஏஓக்கள் ஒத்துழைப்பதில்லை. இதனால்தான் தாமதமாகிறது. இருந்தாலும் விரைவில் பணிகள் முடியும்’’ என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள், பணியை விரைந்து முடிக்க ஒத்துழைக்காத விஏஓக்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட கலெக்டர்கள், தலைமை செயலருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.  அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை டிச.19க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: