அனைத்து சமூகத்தினரையும் பாதுகாப்பதாக உறுதி இலங்கை அதிபராக பதவியேற்றார் கோத்தபய: பதவி விலகுகிறார் பிரதமர் ரணில்?

கொழும்பு: இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே நேற்று பதவியேற்றுக் கொண்டார். அப்போது பேசிய அவர், ‘‘அனைத்து சமூகத்தினருக்கும் பாதுகாப்பு அளிப்பேன்’’ என்று உறுதி அளித்தார்.இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையில் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே மற்றும் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசா ஆகியோரிடையே பலத்த போட்டி நிலவியது. தமிழர்கள் வாழும் பகுதியில் பிரேமதாசாவுக்கு வாக்கு எண்ணிக்கை அதிகரித்தது. அதே நேரத்தில் சிங்களர்கள் பகுதியில் கோத்தபயாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தது. இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். நேற்று முன்தினம் பிற்பகலுக்கு பின்னர் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை வகித்தார். இதனால் தேர்தல் ஆணையம் அறிவிப்புக்கு முன்னரே சஜித் பிரேமதாசா தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். பின்னர் 13லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதனை தொடர்ந்து கோத்தபய ராஜபக்சே நேற்று அதிபராக பதவியேற்றார். இதற்கான விழா, பழமையான புத்தமத நகரமான அனுராதபுரத்தில் நடைபெற்றது. இது தலைநகர் கொழும்புவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. விழாவில் அதிபராக கோத்தபய ராஜபக்சே காலை 11.49 மணிக்கு பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா முன்னிலையில் அலுவலக ஆவணங்களில் கோத்தபய ராஜபக்சே கையெழுத்திட்டார்.அதிபராக பொறுப்பேற்ற பின்னர் கோத்தபய ராஜபக்சே அளித்த பேட்டியில், “மீண்டும் அதிபராகும் எனது முயற்சிக்கு ஆதரவு அளித்த நாட்டில் உள்ள சக்திவாய்ந்த புத்த மதகுருமார்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை அதிபராக்குவதற்காக வாக்களித்த சிங்கள பெரும்பான்மையினருக்கும் எனது நன்றி.  அதிபர் தேர்தலில் சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் தான் நான் வெற்றி பெற்றேன் என்பது எனக்கு தெரியும். சிறுபான்மையினரும் என்னுடன் சேருங்கள். நான் உங்களது வாக்குகளை பெறவில்லை. ஆனாலும் உங்களுக்கும் நான் தான் அதிபர் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன். புத்த மதத்துக்கு முன்னுரிமை அளித்தபோதிலும் அனைத்து சமூகத்தினரையும் நான் பாதுகாப்பேன்.” என்றார். பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபரும், கோத்தபயாவின் சகோதரருமான மகிந்த ராஜபக்சே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றதை அடுத்து தற்போதுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமரை பதவியில் இருந்து அதிபரால் நீக்க முடியாது. அவராகவே தான் பதவி விலக வேண்டும். ஆனால் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு அவருக்கு அழுத்தம் தரப்படுவதாக கூறப்படுகின்றது. இதனிடையே, “எங்களது கட்சி ஜனநாயகத்தை மதிக்கின்றது. நாடாளுமன்ற தேர்தல் குறித்து சபாநாயகர், கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்தோம்” என பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனிடையே எதிர்பாராத தோல்வியை அடுத்து நிதியமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளனர். தற்போதுள்ள நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்டில்தான் முடிகிறது. எனவே அதிபர் கோத்தபய ராஜபக்சேவால் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தான் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய தேர்தலுக்கு உத்தரவிட முடியும்.

பிரபாகரனை கொன்றவருக்குபாதுகாப்பு செயலர் பதவி

இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ  தளபதி கமால் குணரத்ன பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  2009ம் ஆண்டு விடுதலை புலிகளுடான இறுதிப் போர் நடைபெற்றது. இதில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். இந்த போரின்போது 53வது படைப்பிரிவின் தளபதியாக இருந்தவர்தான் கமால் குணரத்ன.  பிரபாகரன், மூத்த தளபதி சூசை உள்ளிட்டோரை தங்களது படைப்பிரிவு தான் கொன்றதாகவும், பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்றும் அப்போது ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தவர் கமால் குணரத்ன. இவர் நந்திகடலுக்கான பாதை என்ற நூலையும் எழுதியுள்ளார்.

நல்லநேரம் பார்த்து பதவியேற்பு

இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்சே நல்ல நேரம் பார்த்து அந்த நேரத்தில் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேயின் பதவியேற்பு விழா அனுராதபுரத்தில் புத்தமதத்தை சேர்ந்தவர்கள் புனித இடமாக கருதும் ருவன்வேலி சேயா மகாஸ்தூபி அருகே நடந்தது. அதிபர் பதவியேற்பதற்காக நல்லநேரம் பார்க்கப்பட்டு இருந்தது. இதன்படி காலை 11.49 மணிக்கு தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா அவருக்கு பதவிப்பிரமாணம் ெசய்து வைத்தார்.

கோத்தபயவுக்கு சீனா வாழ்த்து

பிஜீங்: இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே நேற்று பதவியேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சீனாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்த கோத்தபய ராஜபக்சே, இலங்கை அதிபரானதற்கு சீனாவும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. சீன தலைநகர் பிஜீங்கில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷாங் கூறுகையில், “கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். சீனாவும், இலங்கையும் பரஸ்பர உதவி மற்றும் எப்போதும் நட்புடன் இருக்கும் நாடுகள். புதிய தலைமையிலான இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்” என்றார்.

Related Stories:

>