புறக்கணிக்கப்படுகிறதா தமிழகம் மத்திய அரசின் ப்ரி மெட்ரிக் கல்வி உதவி தொகை 3 ஆண்டுகளாக வழங்கவில்லை

* தூங்கி வழியும் பழங்குடியினர் இயக்குனரகம்

* விழிப்புணர்வு ஏற்படுத்தாத தமிழக அரசு

சிறப்பு செய்தி

பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் எஸ்டி மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ப்ரி மெட்ரிக் கல்வி உதவித் தொகையை 3 ஆண்டுகளாக தமிழகத்துக்கு  வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

பழங்குடியினரின் நலன்களை பாதுகாக்கவும் அவர்களின் சமூக நிலையை மேம்படுத்தவும் தமிழகத்தில் கடந்த 2000ம் ஆண்டு பழங்குடியினர் நல இயக்குனரகம் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் பழங்குடியினர் அதிகமாக வசித்து வரும் சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், தர்மபுரி, நாமக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, கடலூர், மதுரை, அரியலூர், திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய 18 மாவட்டங்களில் பழங்குடியினரின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

தமிழகத்தில் 207 தொடக்கப்பள்ளிகள், 54 நடுநிலைப்பள்ளிகள், 29 உயர்நிலை, 25 மேல்நிலைப் பள்ளிகள் நடத்தப்பட்டுவருகிறது. இந்தப்பள்ளிகளில் 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கு மாணவர்களுக்கு ப்ரி மெட்ரிக் கல்வித் உதவித் தொகை திட்டத்தின் கீழ் தினசரி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மாதத்திற்கு ₹ 150, விடுதி மாணவர்களுக்கு மாதத்திற்கு  300 வழங்கப்படுகிறது.  10ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வித் உதவித் தொகை அவர்கள் படிக்கு படிப்பை பொறுத்து வழங்கப்படுகிறது.  உயர் கல்வி மாணவர்களுக்கான சிறப்பு கல்வி உதவித் தொகை ஐஐடி, ஐஐஎம், என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. வெளிநாடு சென்று பயில சிறப்பு கல்வித் தொகை ஆண்டுக்கு 20 பேருக்கு வழங்கப்படுகிறது.

இதில ப்ரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை மாநில அரசின் மூலமாக வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில்  10ம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகையாக 2014 - 2015ம் ஆண்டு 44 லட்சம், 2015 - 16ம் ஆண்டு  22 கோடி, 2016 - 17ம் ஆண்டு  30 கோடி , 2017- 18ம் ஆண்டு  24 கோடி, 2018 - 19ம் ஆண்டு 39 கோடி மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. ஆனால் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழஙகப்படும் ப்ரி மெட்ரிக் கல்வித் உதவித் தொகை கடந்த 3 ஆண்டுகளில் ஒரு ரூபாய் கூட தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை. இந்த உதவித் தொகையின் படி 2015 - 2016ம் ஆண்டு தமிழகத்திற்கு மத்திய அரசு ₹6 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து 2014-15, 2016-17, 2017-18, 2018-19 ஆகிய நான்கு ஆண்டுகளில் ஒரு ரூபாய் கூட மத்திய அரசு தமிழகத்திற்கு விடுவிக்கவில்லை.

இதற்கு தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறைதான் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் இந்த உதவித் தொகை தொடர்பாக உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தாத காரணத்தால் பெரும்பலான மாணவர்களுக்கு இது தொடர்பான தகவல் சென்றடைவது இல்லை. இதனால் மாணவர்கள் விண்ணப்பிக்காமல் விட்டு விடுகின்றனர். எனவே தமிழக அரசின் இனிமேல் ஆவது இந்த உதவித் தொகை தொடர்பாக மாணவர்களிடம் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கல்வி உதவித் தொகையை முறையாக பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: