காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணை அமைக்க வழக்கு : தலைமைப் பொறியாளர் முடிவெடுக்க உத்தரவு

மதுரை:  திருச்சி மாவட்டம்,  திருவரங்கம், உத்தமர்சீலியை சேர்ந்த விஜயகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் முக்கொம்பூரில் பிரிந்து கல்லணையில் ஒன்று சேர்கிறது. கொள்ளிடத்தில் தடுப்பணைகள் ஏதும் இல்லை. இதனால் ஆற்று நீர் முழவதும் தஞ்சாவூர் வழியாக சென்று கடலில் கலக்கிறது. எனவே, திருச்சி, திருவரங்கம் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே உத்தமர்சீலிக்கும் வேங்கூருக்கும் இடையே ஒரு தடுப்பணையும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கிளிக்கூடுக்கும், இடையாற்றுமங்கலத்துக்கும் இடையே ஒரு தடுப்பணையும் அமைத்தால், 5,000 ஏக்கருக்கு பாசன வசதி கிடைக்கும். எனவே, இந்தப்பகுதியில் இரு தடுப்பணைகள் கட்டுமாறு உத்தரவிட வேண்டும்என கூறியிருந்தார்.

மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் விசாரித்து அளித்த உத்தரவு: தொழில்நுட்ப காரணங்களுக்காக மனுதாரரின் கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். அதே நேரம் பொதுநலன் கருதியே இந்த மனு செய்யப்பட்டுள்ளது. இதன் சாத்தியக்கூறுகள் குறித்து பொதுப்பணித்துறையினர் தான் முடிவெடுக்க முடியும். மனுதாரர் தனது கோரிக்கையின் சாத்தியக்கூறுகள் குறித்து தொழில்நுட்ப வல்லுநரின் திட்ட அறிக்கையுடன்  மனுவை பொதுப்பணித்துறை சிறப்பு தலைமைப் பொறியாளரிடம் (நீர்பாசனம்) அளிக்க வேண்டும். அவர் அைத செயல்படுத்துவது குறித்து 12 வாரத்திற்குள் புதிதாக முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories:

>