சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றம்: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

சென்னை: சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்படுகிறது என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடியில் கேரள மாநிலம், கொல்லம், கிளிகொல்லூர் கிராமத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் (18) என்ற மாணவி எம்.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். ஐஐடி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கினார். கடந்த சனிக்கிழமை இவர் விடுதியில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோட்டூர்புரம் போலீசார் விசாரித்தனர். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்து தற்கொலை ெசய்து கொண்டதாக தெரிவித்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில் மாணவியின் செல்போன் நோட்ஸ் பகுதியில் தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் எழுதி வைத்திருந்தது தெரிந்தது. ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் கொடுத்த நெருக்கடியே தற்கொலைக்கு காரணம் என அதில் இருந்தது. மேலும் 4 பேராசிரியர்களின் பெயரும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து மாணவியின் செல்போன் தடவியல் துறைக்கு அனுப்பட்டு அந்த பதிவுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவர் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கு விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்நிலையில் மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், காவல் இணை ஆணையர் சுதாகர், மற்றும் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் இன்று நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவர் பேட்டியளித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்; ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுகிறது.

சிபிஐ-ல் பணியாற்றிய கூடுதல் ஆணையர் ஈஸ்வர மூர்த்தி தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. கூடுதல் அதிகாரியாக துணை ஆணையர் மெகலினா செயல்படுவார்  என கூறினார்.

Related Stories: