‘இளைய சமுதாயம் கெட்டுப் போகுது’ ‘செல்போனை கண்டுபிடிச்சவங்க கையில கிடைச்சா, மிதிக்கணும்...’

காரைக்குடி: செல்போனால் இளைய சமுதாயம் கெடுகிறது.  செல்போனை கண்டுபிடித்தவர்களை மிதிக்க வேண்டும் என அமைச்சர் பாஸ்கரன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பாண்டி வரவேற்றார். மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார்.

இலவச லேப்டாப் வழங்கி கதர் மற்றும் கிராமத்தொழில்கள் வாரிய அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில், ‘‘ஒவ்வொரு மனிதனுக்கும் மாணவப்பருவம் மிகவும் அரிதாகும். இக்கால கட்டத்தில் கவனம் சிதறுதல் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு கவனம் சிதறாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இன்று செல்போன் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. சாலைகளில் அவர்களாகவே பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் செல்கின்றனர். இந்த செல்போனை கண்டுபிடித்தவர்கள, கையில் கிடைத்தால் மிதிக்க வேண்டும். அவர்கள் நல்ல முறையில் பயன்படுத்த கண்டுபிடித்து இருந்தாலும், இன்று இளைஞர்கள் தவறான முறையில் பயன்படுத்துகின்றனர். செல்போனால் இளைய சமுதாயம் கெடுகிறது. படிப்பது குறைந்துவிட்டது’’ என்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி செந்தில்நாதன், மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன், கல்லூரி முதல்வர்கள் பழனிச்சாமி, மணிவண்ணன், கானாடுகாத்தான் பேரூராட்சி முன்னாள் தலைவர் சிதம்பரம், கூட்டுறவு விற்பனை பண்டகச்சாலை துணைத்தலைவர் மெய்யப்பன், தாசில்தார் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். அமைச்சரின் இந்த பேச்சு வாட்ஸ் அப், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

Related Stories: