கிரிக்கெட் பெட்டிங் வழக்கு சர்வதேச சூதாட்ட புக்கி கைது: சி.சி.பி போலீஸ் நடவடிக்கை

பெங்களூரு: கர்நாடக பிரிமீயர் லீக் போட்டியின் போது கிரிக்கெட் வீரர்களை  சூதாட்டத்தில் ஈடுபட செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சர்வதேச சூதாட்ட  புக்கி  ஷியாமை நேற்று சி.சி.பி போலீசார் டெல்லியில் வைத்து கைது செய்துள்ளனர். கர்நாடக  பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் அதிகளவு சூதாட்டம் நடைபெறுவதாக  குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சி.சி.பி  போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். முதற்கட்ட விசாரணையில்  2019ம் ஆண்டு நடந்த கிரிக்கெட்  போட்டியில் கலந்து கொண்ட பெலகாவி கிரிகெட்  அணியின் உரிமையாளர் அலி என்பவர் வீரர்களை சூதாட்டத்திற்குள் இழுத்தது கண்டு  பிடிக்கப்பட்டது.

அவரிடம் நடத்தப்பட்ட  விசாரணையில் இன்டர்நேஷனல் புக்கியான ஷியாம்  மற்றும் ஜுட்டின் என்பவர்  மூலம் ஒவ்வொரு வீரர்களை தொடர்பு கொண்டு, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக  தெரியவந்தது. இதில் பிற அணியை சேர்ந்த பயிற்சியாளர்கள், பேட்ஸ்மேன்கள்,  பவுலர்களுக்கு அடுத்தடுத்த தொடர்பு இருப்பதாக போலீசார் விசாரணையில்  கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நேரில் ஆஜராகி  விளக்கம் அளிக்கும்படி கூறப்பட்டிருந்தது. அதன்படி குற்றச்சாட்டிற்கு ஆளான  அனைவரும்  நேரில் ஆஜராகி  விளக்கம் அளித்தனர்.

அதில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வீரர்களான 2 பேர், நிதானமாக பேட்டிங் செய்வதற்காக ₹20 லட்சம் பெற்றிருப்பதாக தெரியவந்தது. முறையான  ஆதாரங்களின் பேரில் அவர்களை தேடி வந்த போலீசார், கடந்த 4 தினங்களுக்கு  முன்பு கைது செய்தனர். இந்நிலையில் சூதாட்டிற்கு மூலகாரணமாக இருந்த புக்கிகள் ஷியாம்,  ஜுட்டின் ஆகியோரை  சி.சி.பி போலீசார், நேற்று டெல்லியில் கைது  செய்தனர். அரியானா மாநிலத்தை சேர்ந்த இவர் டெல்லியில் இருந்தபடி  சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மற்றொருவர்  தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: