இன்று இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தாள்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

டெல்லி: இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தாளை இன்று இஸ்லாமியர்கள் மிலாது நபியாக கொண்டாடுகிறார்கள். இதனை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி  உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், மிலாது நபியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு, குறிப்பாக நமது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் நமது முஸ்லிம் சகோதரர்கள் மற்றும்  சகோதரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி:

சமுதாயத்தில் நல்லிணக்கம், இரக்க உணர்வை இந்நாள் மேலும் அதிகரிக்கட்டும். சுற்றிலும் அமைதி நிலவட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் மிலாது நபி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி:

நபிகள் நாயகம் பிறந்த தினமான “மீலாதுன் நபி” திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள். இறைத்தூதர் நபிகள் நாயகம் போதனைகளை மனதில் நிறுத்தி, மக்கள்  நற்சிந்தனையுடன் அறவழியை பின்பற்றி வாழ்ந்திடல் வேண்டும். உலகில் அன்பு பெருகி, அமைதி தவழ்ந்து, சகோதரத்துவம் தழைத்திட வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: அண்ணல் நபிகள் நாயகத்தின் பிறந்த நன்னாளான மிலாது நபித் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள் அனைவருக்கும் திமுக  சார்பில் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணல் நபிகளாரின் போதனைகளிலிருந்து வழுவாமல் வாழ்ந்துவரும் இஸ்லாமிய சமுதாயத்தின்பால் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கும்  ஆழமான பாச உணர்வுடன், இஸ்லாமியச் சமுதாய மக்கள் அனைவருக்கும்,  எனது உளம் கனிந்த மிலாது நபித் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

இஸ்லாமிய தீர்க்கதரிசி நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாதுன் நபி திருநாளைக் கொண்டாடும்  உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு  வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். நபிகள்  நாயகம் போதனைகளை   கடைபிடிக்க இந்த நன்னாளில் உறுதி ஏற்போம் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

எதிலும் ஒரு புது மாதிரி, எல்லோர்க்கும் முன்மாதிரி, வாழும்போதே வரலாறு ஆனவர் அண்ணல் நபி. தன் வாழ்நாளிலேயே தலைகீழ் மாற்றங்களைக் கண்ட பெருந்தகை முஹம்மது நபி பிறந்தநாள்  மகிழ்ச்சி நிறைந்த பெருமங்கல நன்நாளில்  இஸ்லாமிய சகோதரர் - சகோதரிகளுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்திய ஜனநாயக கட்சியின்  தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோரும் மிலாது நபி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: