இந்தியர்கள் உணர்வை புரிந்து கொண்டதற்கு பாக். பிரதமருக்கு மோடி நன்றி: கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைத்து பேச்சு

குருதாஸ்பூர்: கர்தார்பூர் யாத்திரை வழித்தட விவகாரத்தில் இந்தியர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவையும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நரோவால் மாவட்டத்தில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ள தர்பார் சாகிப் குருத்வாராவையும் இணைக்கும் கர்தார்பூர் வழித்தட பணியை இந்தியா-பாகிஸ்தான்  கடந்தாண்டு நவம்பரில் தொடங்கியது.

இதற்கான பணிகள் முடிவடைந்து, வரும் 12ம் தேதி குருநானக்கின் 550வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கர்தார்பூர் யாத்திரை வழித்தடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. முதல்  கட்டமாக நேற்று 500 யாத்திரீகர்கள் சென்ற பேருந்துகளை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த யாத்திரையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப்  முதல்வர் அமரீந்தர் சிங், முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், சிரோன்மணி அகாலிதளம் கட்சி தலைவர்களான அகல் தக்த் ஜாதேதார் ஹர்பிரீத் சிங், சுக்பீர் சிங் பாதல், ஹர்சிம்ரத் கவுர் பாதல் பங்கேற்றுள்ளனர்.    

மேலும், சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி உறுப்பினர்கள், பஞ்சாப் மாநிலத்தின் 117 எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், அமைச்சர்கள் ஆகியோரும் சென்றுள்ளனர். இவர்கள் செல்லும் பேருந்துகளை கர்தார்பூரில் இம்ரான் கான் வரவேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5,000 இந்திய யாத்திரீகர்கள் கர்தார்பூர் வருவதற்கு பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.

தேரா பாபா நானக் குருத்வாரா எல்லையில், வழித்தடத்தை திறந்து வைத்து தேசத்துக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி உரையாற்றியதாவது:

கர்தார்பூர்  யாத்திரை வழித்தட விவகாரத்தில் இந்தியர்களின் உணர்வுகளை புரிந்து  கொண்டதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி  தெரிவிக்கிறேன்.

கர்தார்பூர் யாத்திரை வழித்தடத்தை திறந்து வைத்து, தேசத்துக்கு அர்ப்பணித்ததை பாக்கியமாக கருதுகிறேன். இந்த திறப்பு விழா மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும். இந்த புனித மண்ணில் நிற்பது நான் செய்த பாக்கியம். ஆன்மீக சேவைகளில் ஈடுபடும் போது உங்களுக்கு ஏற்படும் அதே உணர்வு தான் இப்பொழுது எனக்கும் ஏற்பட்டுள்ளது. குருநானக் தேவ் சீக்கியர்களுக்கு மட்டும் வழிகாட்டி அல்ல. அவர் மனித சமுதாயத்திற்கு சிறந்த வழிகாட்டி ஆவார். நமது பண்புகள், கலாச்சாரம், எண்ணங்கள் ஆகியவை குருநானக் போன்ற மகான்களால் வளர்க்கப்பட்டவை. இவ்வாறு அவர் பேசினார்.

‘அயோத்தி வழக்கு தீர்ப்பை ஒத்திவைத்திருக்க கூடாதா?’

அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து பாக். வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறுகையில், வழக்கின் தீர்ப்பை சிறிது நாட்கள் தள்ளி வைத்திருக்கக் கூடாதா? கர்தார்பூர் வழித்தட திறப்பு விழா நிகழ்ச்சியில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தருணத்தில், மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில், தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் உணர்வுப்பூர்வமான வழக்கின் தீர்ப்பை அளிப்பதற்கு உகந்த நேரம் இதுவல்ல. இதனால், மிகுந்த மனவேதனை அடைகிறேன்,’’ என்றார்.

பாக். முயற்சிக்கு சான்று:

குருநானக்கின் 550வது பிறந்த நாளில் சீக்கிய சமூகத்தினருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் இம்ரான்கான் கூறுகையில், சீக்கிய யாத்திரீகர்களுக்கான கர்தார்பூர் வழித்தட திறப்பு, பிராந்திய அமைதிக்கு பாகிஸ்தான் எடுத்த முயற்சிக்கு சான்று பகரக் கூடியது. இந்த வழித்தடத்தை திறந்து இருப்பதன் மூலம் எல்லைகளை மட்டும் திறக்கவில்லை. சீக்கியர்களுக்காக எங்களின் இதயங்களையும் திறந்துள்ளோம். வழிபாட்டு தலங்கள், புண்ணிய தலங்கள் ஆகிய விவகாரங்களில் முஸ்லிம்களுக்கு நல்ல புரிதல் உள்ளது,’’ என்றார்.

Related Stories: