தமிழக அரசின் உத்தரவாதம் எதிரொலி பேக்கேஜ் டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும்: முதன்மை தலைமை பொறியாளரிடம் ஒப்பந்ததாரர்கள் சங்கம் மனு

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் அனைத்து பேக்கேஜ் டெண்டரையும் ரத்து செய்ய வேண்டும் என்று முதன்மை தலைமை பொறியாளரிடம் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். தமிழக பொதுப்பணித்துறையில் சிறிய பணிகளை கூட ஒருங்கிணைத்து பேக்கேஜ் முறையில் டெண்டர் விட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், பொதுப்பணித்துறையில் முதல் நிலை கான்ட்ராக்டர் மட்டுமே டெண்டரில் கலந்து கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் கான்ட்ராக்டர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் கான்ட்ராக்டர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையின் போது பேக்கேஜ் டெண்டர் அரசாணை ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, பொதுப்பணித்துறை கட்டிட ஒப்பந்ததாரர்கள் பொது நலச்சங்கம் சார்பில் முதல்வரின் தனிப்பிரிவிலும், கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், கடந்த அக்டோபர் 15ம் தேதி, நவம்பர் 1ம் தேதி  பேக்கேஜ் முறையில் டெண்டர் வைத்த பணிகளை ரத்து செய்ய வேண்டும்.

 

தனித்தனியாக டெண்டர் வைத்தால் சிறு ஒப்பந்ததாரர்கள் முறையே வகுப்பு II, III,IV,V ஆகியோர் பயனடைவர். அக்டோபர் 15, நவம்பர் 1ம் தேதிகளில் வைத்த ஒப்பந்த பணிகள் இரண்டும் வடமாநில கோட்டம், தென்மாநில கோட்டம் போன்றவைகளில் பணி செய்யும் சிறு ஒப்பந்ததாரர்கள் டெண்டரில் பங்கு கொள்வார்கள். பேக்கேஜ் டெண்டரை ரத்து செய்வதால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறு ஒப்பந்ததாரர்களும் பயனடைவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: