உழவன் செயலி மூலம் உரம் இருப்பு மற்றும் விலையை அறிந்து விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை மூலம் உரங்களை பெறலாம்: வேளாண்மைத் துறை அறிவிப்பு

சென்னை: விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டையினை எடுத்து சென்று அருகாமையில் உள்ள உர விற்பனை நிலையங்களில் தேவையான உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் பெறலாம் என்று வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ராபி பருவத்திற்கான (அக்டோபர் - மார்ச்) உரத்தேவை 6 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். மத்திய அரசு, தமிழகத்திற்கு ரபி பருவத்திற்குத் தேவையான 6லட்சம் மெட்ரிக் டன் உரத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாட்டிற்கு நவம்பர் மாத ஒதுக்கீடாக 1.58லட்சம் மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் 1.42லட்சம் மெட்ரிக் டன் யூரியா உடனடி விநியோகத்திற்கு இருப்பில் உள்ளது.  

தமிழக அரசு, மத்திய அரசின் உரத்துறையினை தொடர்பு கொண்டு நவம்பர் 2019 மாதத்திற்கான யூரியா ஒதுக்கீடான 1.58லட்சம் மெட்ரிக் டன் யூரியா உரத்தினை முழுமையாக பெற்றிட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தற்போது காரைக்கால் துறைமுகத்தில் இப்கோ நிறுவனத்திற்கு 33 ஆயிரம் மெட்ரிக் டன் இறக்குமதி யூரியா பெறப்பட்டு தற்சமயம் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. யூரியா உரம் தேவைக்கேற்ப விவசாயிகளுக்கு கிடைத்திட தொடர்ந்து விரைவு நடவடிக்கை மேற்கொண்டு வருவதன் விளைவாக தமிழ்நாட்டிற்கு யூரியா உர வரத்து விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, காமராஜர் துறைமுகத்தில் இருப்பில் உள்ள 20 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரத்தினை தமிழகத்திற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது தவிர தமிழ்நாட்டின் பயன்பாட்டிற்காக நேஷனல் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் உரத்தினை ஒதுக்கீடு செய்ய இசைவு அளித்துள்ளது. யூரியா உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஸ்பிக் நிறுவனத்தில் யூரியா உற்பத்தி மீண்டும் துவக்கப்பட்டு மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யும் பணி தற்சமயம் நடைப்பெற்று வருகிறது. மேலும், காரைக்கால் துறைமுகத்திற்கு இம்மாத இரண்டாம் வாரத்தில் தமிழ்நாட்டின் பயன்பாட்டிற்காக 37 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா இறக்குமதி செய்யப்படவுள்ளது.       

 

இதர முன்னணி நிறுவனங்கள் வாயிலாக உரங்கள் பெற்றிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முன்னணி உர நிறுவனங்கள் மற்றும் துறைமுகங்களில் இருப்பில் உள்ள யூரியா உரத்தினை தங்கு தடையின்றி கிடைப்பதற்கும் விநியோக பணியினை துரிதப்படுத்தவும் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேவைப்படும் பகுதிகளுக்கு உடனடியாக யூரியா உரத்தினை மாற்றம் செய்யும்  நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது 45 கிலோ எடையுள்ள யூரியா மூட்டை ₹266.50 என நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், தமிழக வேளாண்மைத்துறையின் உழவன் செயலி மூலம் கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் உரம் இருப்பு மற்றும் உர விலை விவரங்களை அறிந்து, விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டையினை எடுத்து சென்று அருகாமையில் உள்ள உர விற்பனை நிலையங்களில் தேவையான உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் பெறலாம். விவசாயிகள் தங்கு, தடையின்றி உரம் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வுக் கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வேளாண்மைத்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் சுப்பையன், கூடுதல் வேளாண்மை இயக்குநர் (பணி மேலாண்மை) விஜயராணி, அனைத்து மாவட்ட இணை இயக்குநர்கள் மற்றும் அனைத்து மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர்கள் (தரக்கட்டுப்பாடு) கலந்து கொண்டனர்.

Related Stories: