மதுரை: மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மேலூர் ராமர் உள்ளிட்ட 13 பேர், தமிழக அரசின் பொதுமன்னிப்பு அடிப்படையில் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மேலவளவு பஞ்சாயத்து தனி தொகுதியில் போட்டியிட்டு தலித் சமுதாயத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் வெற்றி பெற்றார். தங்களின் எதிர்ப்பையும் மீறி போட்டியிட்டு வெற்றி பெற்றதால் ஆத்திரம் அடைந்த மற்றொரு சமூகத்தினர் பஞ்சாயத்து தலைவர் முருகேசனை கொல்ல முடிவு செய்தனர். அதன்படி கடந்த 1997, ஜூன் 30ல் பஸ்சில் சென்று கொண்டிருந்த முருகேசன் உட்பட 7 பேரை மடக்கி ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். தமிழகத்தையே உலுக்கிய இவ்வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சுப்ரீம்கோர்ட் வரை அப்பீல் செய்தும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.