அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் இல்லை...சன்னி வக்பு வாரியம் அறிவிப்பு

லக்னோ: நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதன்படி  அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு  உத்தரவிட்டுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்புகளுக்கே என்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை ஒன்றை 3  மாதத்தில் உருவாக்க மத்திய அரசுக்கு அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. அறக்கட்டளை மேற்பார்வையில் அயோத்தியில் ராமர் கோயில்  கட்டும் பணி நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சன்னி வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் மத்திய, மாநில   அரசுகளால் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு கட்சி தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே, அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம்; ஆனால் திருப்தி இல்லை என்று அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட  வாரியத்தின் வழக்கறிஞர் ஜிலானி தெரிவித்துள்ளார். நாங்கள் எதிர்பார்த்தபடி தீர்ப்பு கிடைக்கவில்லை. இதனை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல்  செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கான சட்ட ரீதியிலான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம் என்றார். தீர்ப்புக்கு எதிராக எங்கும் எந்த போராட்டமும்  நடத்த கூடாது வழக்கறிஞர் ஜிலானி வலியுறுத்தினார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச சன்னி வக்பு வாரியம் தலைவர் சுஃபர் ஃபரூகி சார்பில் ஒரு செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். உத்தரப்பிரதேச சன்னி வக்பு வாரியத்தின் தலைவராக ஒரு  விஷயத்தை நான் தெளிவுப் படுத்த விரும்புகிறேன். அதாவது உத்தரப்பிரதேச சன்னி வக்ஃபு வாரியத்தின் சார்பில் இந்தத் தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு  மனுவை நாங்கள் தாக்கல் செய்ய மாட்டோம்.

இது தொடர்பாக ஏதாவது ஒரு வழக்கறிஞர் அல்லது வேறு அமைப்புகள் யாராவது நாங்கள் மறுசீராய்வு செய்வோம் என்று கூறினால் அது எங்களுடைய  கருத்து அல்ல. மேலும் 2010-ஆம் ஆண்டு அலாகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தற்போது உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளதற்கு நாங்கள் நன்றி  தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: