மணலி அருகே சடையங்குப்பத்தில் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த 2.5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு

திருவொற்றியூர்: மணலி மண்டலம், 16வது வார்டுக்குட்பட்ட சடையங்குப்பம், பர்மா நகரில் அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் காலி நிலம் உள்ளது. இவற்றில் ஒரு பகுதியை தனியார் சிலர் ஆக்கிரமித்து போலியான ஆவணங்கள் தயாரித்து, அதில் தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடங்களை கட்டி பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், சடையங்குப்பம், பர்மா நகர் பகுதியில் சுமார் 2.5 ஏக்கர் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை கடந்த சில மாதங்களுக்கு முன், தனியார் ஒருவர் ஆக்கிரமித்து அதில் சுற்றுச்சுவர் எழுப்பினார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் ஆகியோருக்கு புகார் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், அரசு நிலத்தில் விதிமீறி மதில் சுவர் கட்டக் கூடாது, என்று தடுத்து நிறுத்தினர். அப்போது தங்களிடம் ஆவணம் உள்ளது என்று சம்பந்தப்பட்ட தனியார் நபர், அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதற்கு உரிய ஆவணங்கள் இருந்தால் அதை வருவாய்த்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதுவரை எந்த கட்டுமானமும் செய்யக்கூடாது என்று தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த நிலம் தொடர்பாக விசாரணை நடத்தி, நில அளவை செய்து அதில் ஆக்கிரமிப்பு இருந்தால் அதை சட்ட விதிமுறையின்படி அகற்றி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு வடசென்னை கோட்டாட்சியர் கடந்த செப்டம்பர் மாதம் 13ம் தேதி தாசில்தாருக்கு உத்தரவிட்டார். தற்போது இந்த விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், பிரச்னைக்குரிய இந்த அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் கடந்த இரு தினங்களாக மீண்டும் மதில்சுவர் கட்டும் பணி நடைபெற்றது. தகவலறிந்து, நேற்று முன்தினம் மாலை வருவாய் துறை ஆய்வாளர் ரேவதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோர் சடையங்குப்பம் பர்மா நகர் பகுதிக்கு வந்தனர்.

அங்கு, அரசு நிலத்தில் விதிமீறி மதில்சுவர் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும், “இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது. எனவே, ஆக்கிரமிப்புகளை உடனே உடனே அகற்ற வேண்டும்” என்று நோட்டீஸ் வினியோகித்தனர். பின்னர் அந்த இடத்தில் எச்சரிக்கை பலலை வைத்தனர். அதில், திருவொற்றியூர் வட்டம், சடையங்குப்பம் புல எண் 29/1, நிலம், அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலமாகும். இந்த நிலத்தை ஆக்கிரமிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும் என, குறிப்பிட்டு இருந்தது.

Related Stories: