திறந்து 10 ஆண்டுக்கு மேலாகியும் அடிப்படை வசதிகள் இல்லாத காரைக்கால் மீன்பிடி துறைமுகம்

*தினமும் அல்லல்படும் மீனவர்கள்

*துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி

துறைமுகத்தின் பணிகள் முழுமையாக முடியும் முன்பே, மீனவர்கள் துறைமுகத்தை பயன்படுத்த துவங்கி விட்டனர். துறைமுகத்தில், மீனவர்களின் அடிப்படை தேவைகளான, ஐஸ்பிளாண்ட், குளிர்சாதன அறைகள், மீன் விற்பனை தளம், கூடுதல் ஜெட்டி (படகு நிறுத்தும் தளம்), வடிகால் வசதிகள், கூடுதல் மீன் விற்பனை தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு இதுவரை செய்யவில்லை. முக்கியமாக, நல்ல குடிநீர், கழிவறை, தங்கும் அறைகள் இருந்தும் அவை முறையாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் மீனவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும், மீனவர்களின் கோரிக்கையை ஏற்று, துறைமுகத்தில் மானியவிலை டீசல் பங்க் திறக்கப்பட்டாலும், அது போதுமானதாக இல்லை. பலர் வெளியிலிருந்து தான் டீசலை வாங்கி வருகின்றனர். மீனவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் கடந்து வெளியிலிருந்து டீசல் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். யார் எவ்வளவு டீசல் வாங்குகின்றனர், எவ்வளவு கடற்கரைக்கு கொண்டு செல்லப்படுகிறது? என்ற விவரம் மீன்வளத்துறை அதிகாரிக்கோ, மாவட்ட நிர்வாகத்திற்கோ தெரியவாய்ப்பு இல்லை. இன்னும் சொல்லப்போனால், மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் துறைமுகம் பக்கமே தலைகாட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

தினமும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், வியாபாரிகள், மீனவ பெண்கள் அதிகம் வந்து செல்லும் துறைமுகத்தில் கழிவறை வசதி இல்லாமல் இருப்பது வேதனையின் உச்சம். அத்துடன், துறைமுக ஏலக்கூடத்தை சுற்றியும், வாகன நிறுத்தும் இடத்திலும், சாலைகளிலும் முறையான கழிவுநீர் வடிகால் வாய்க்கால் இல்லாததாலும், சுத்தம் செய்ய ஆளில்லாமல் இருப்பதாலும் எப்பொழுது பார்த்தாலும் துறைமுகத்தின் அனைத்து பகுதியிலும் கழிவுநீர் அதிகப்படியாக தேங்கி கொசு உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் மீனவர்களும், மீன் வாங்க வரும் பொதுமக்களும் மிகுந்த இன்னலுக்கு ஆளாகுகின்றனர். போதாதற்கு துறைமுகம் துவங்கும் சாலையிலிருந்து, துறைமுகம் உள்வரை போதுமான மின்விளக்கு இல்லை. துறைமுகத்திலிருந்து யார் கடலுக்கு செல்கின்றனர், யார் யார் கடலில் இருந்து துறைமுகத்திற்கு வருகின்றனர் என்ற விவரத்தை அறியவும் அங்கு யாரும் இல்லை.இது குறித்து, கிளிஞ்சல்மேடு மீனவர் வீரதாசன் கூறும்போது, காரைக்காலில் 400 விசைபடகுகள் உள்ளது. ஆனால், மீன்பிடி துறைமுகத்தில் 200 படகுகளை நிறுத்த மட்டுமே இடவசதி உள்ளது. துறைமுகம் கட்டிய நாள் முதல் அரசலாற்றின் தென்கரையில் உள்ள மணல் மேடுகள் இதுவரை சுத்தம் செய்யவில்லை. அதனை சுத்தம் செய்து தூர்வாரினால், 100 படகுகளை அங்கே தாராளமாக நிறுத்தலாம்.

துறைமுகத்தின் கருக்களாச்சேரி பகுதியில் உள்ள முல்லையாற்றை விரிவுபடுத்தி தூர்வாரினால், மேலும் 100 விசைப்படகுகளை நிறுத்தலாம். இது இல்லாமல், அரசலாற்றின் தென்கரையில் தற்போதுள்ள ஜெட்டியை விரிவாக்கம் செய்தால், பைபர் படகுகளுக்கு தனி இடம் கிடைக்கும். மேலும், படகுகளை ஏற்றி இறக்கவும், பழுதுபார்க்கவும் தனி இடம் ஒதுக்கித்தர வேண்டும். அதிமுக்கியமாக, அரசலாறு மற்றும் முல்லையாற்றை ஆண்டுதோறும் தூர்வார வேண்டும். இவையெல்லாம் செய்தால் அரசலாற்றின் வடக்கு புறத்தில் எந்தவித படகுகளும், மீன் வாகனங்களும் செல்லாது. இது பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

அத்துடன் மீனவர்கள் தினசரி பல கிலோ மீட்டர் கடந்து வெளியிலிருந்து டீசலை கொண்டுவரும் போது பல ஆபத்துகளையும், சிக்கல்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே மீனவர்களின் நலன் கருதி, துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள மானியவிலை டீசல் பங்குடன், முழு விலைக்கு டீசல் விற்பனை ஒன்றை துறைமுகத்திலேயே திறக்க வேண்டும். துறைமுகத்தின் தண்ணீர் தேவை, மின்வசதிகளை, மீனவர்களிடையே வசூல் செய்து நாங்களே சரி செய்து வருகிறோம்.

 மாதா மாதம் மீன்வளத்துறை குறிப்பிட்ட பராமரிப்பு பணிகளை செய்ய முன்வர வேண்டும். அனைத்து மீனவ கிராமத்திலும் சாலை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின்விளக்கு, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, மீன்பிடி துறைமுகத்துக்கு சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பெயரை சூட்டவேண்டும். இதனை பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றார்.

காரைக்கால்:

காரைக்கால் அரசலாறு, முல்லையாறு கடலோடு இணையும் முகத்துவாரம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டது. தொலைநோக்கு பார்வையில்லாத காரணத்தால், 600 விசைப்படகுகளை நிறுத்தவேண்டிய இடத்தில் வெறும் 200 படகுகளை மட்டுமே நிறுத்தும் அளவுக்கு மீன்பிடி துறைமுகம் கட்டப்பட்டுள்ளது.

தங்கும் அறைகள், கழிவறை திறக்கப்படுமா?

மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக 14 தங்கும் அறைகள் கட்டப்பட்டு அவை  பூட்டி கிடக்கிறது. இது மீனவர்கள், மீன் வியாபாரிகள், தங்கள் தராசு, ஐஸ்பெட்டி உள்ளிட்ட பொருட்களை வைத்து தங்கி இளைப்பாற கட்டப்பட்டது. ஆனால் பயன்படுத்தாமல் அப்படியே கிடக்கிறது. அதேபோல், தினமும் 6 ஆயிரம் பேர் வந்து போகும் இடத்தில் கழிவறை கட்டப்பட்டும் உபயோகம் இல்லாமல் இருக்கிறது. அதை திறப்பதுடன் கூடுதல் கழிவறைகளையும் கட்ட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன் கழிவுகளால் துர்நாற்றம்

மீனவர்கள் பலர் மீன்வளத்துறையின் எச்சரிக்கையை மீறி, மீன்கழிவுகளை பகல் நேரத்தில் அதிகம் ஏற்றிவருவதாலும், அது சாலை வழியாக கொண்டு செல்லப்படுவதாலும் துர்நாற்றம் அதிகம் வீசுவதால் அதை முறைப்படுத்த வேண்டும். காரைக்கால் கடற்கரை சாலையில் மீனவர்கள் சிலர், கலெக்டர், மீன்வளத்துறையின் எச்சரிக்கையை மீறி, படகு கட்டுதல், மீன்வலை மற்றும் மீன்பிடி பொருட்களை ஏற்றி இறக்குதல், காய வைப்பதாலும் துர்நாற்றம், போக்குவரத்து பாதிப்பு, ஆற்றின் கரை சேதமாதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனையும் மாவட்ட நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: