பிரபல நகைக்கடையில் திருட்டு வடமாநில கொள்ளையர் 2 பேர் பிடிபட்டனர்

அண்ணாநகர்: அண்ணாநகரில் உள்ள பிரபல நகைக்கடையில் திருடிய வடமாநில கொள்ளையர் 2 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு பிரபல நகைக்கடைக்கு, கடந்த 2 மாதத்துக்கு முன் வந்த 2 பேர், நகை வாங்குவதுபோல் நடித்து 5 பவுன் நகையை ஷூவில் வைத்து திருடி சென்றனர். இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் கொடுத்த  புகாரின்படி, அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மேலும், நகைக்கடை மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

Advertising
Advertising

இந்தநிலையில், அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா, எஸ்ஐ ஜாபர் உசேன், ராஜேஷ், குணசேகர் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக நடந்து சென்ற இருவரை, போலீசார்  அழைத்தபோது, அவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால், போலீசார் விரட்டிச்சென்று அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். இதன்பிறகு இருவரையும் அண்ணாநகர் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், பிடிபட்ட நபர்கள் உ.பி. மாநிலத்தை சேர்ந்த அமித்குமார் (46), கணேஷ் தோணி (47) என்பதும், இவர்கள் ஆந்திரா, கர்நாடகா மற்றும் மும்பை பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பதும், அண்ணாநகரில் உள்ள பிரபல  நகைக்கடையில் கைவரிசை காட்டியவர்கள் என்பதும் தெரிந்தது.  அவர்களிடம் இருந்து 5 பவுன் நகையை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: