விலை ஏற்றத்தை தடுக்க வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை : மத்திய அமைச்சர் பஸ்வான் தகவல்

புதுடெல்லி: டெல்லியில் நேற்று அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வெங்காயம் விலை உயர்வு குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. நடப்பு காரிப் பருவத்தில், உள்நாட்டு வெங்காய உற்பத்தி 30 முதல் 40 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால்தான், சந்தையில் அதன் விலை கணிசமாக உயர்ந்து விட்டது. அதை தடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காரிப் பருவ வெங்காயம் இன்னமும் சந்தைக்கு வரவில்லை. தேவை அதிகமாக உள்ள நிலையில் வரத்து குறைந்துள்ளதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய, மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வெங்காயம் விலை எப்போது குறையும் என்று ஜோதிடர்களை போன்று என்னால் சரியாக கணித்து கூற முடியாது. ஆனால், இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் விலை குறையக்கூடும் என்று நம்புகிறேன். வெங்காயம் விலையை குறைப்பதற்காக, அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கச்சா மற்றும் பதப்படுத்திய வெங்காயத்தை இனி உள்நாட்டில்தான் விற்க வேண்டும். இதேபோல், வெங்காயத்தை இருப்பு வைத்துக் கொள்ளவும் வர்த்தகர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 57,000 டன் வெங்காயம், சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இதில், 25 சதவீதம் அழுகி வீணாகிவிட்டது. ஆனால், இன்னமும் கூட மத்திய கிடங்குகளில் 1,525 டன் வெங்காயம் இருப்பு உள்ளது என்றார்.

துருக்கி வெங்காயம் வருகிறது

அமைச்சர் கூறுகையில், ‘வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், எகிப்து, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து தனியார் மூலம் வெங்காயத்தை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: