தென் கொரிய உளவு நிறுவனம் சந்தேகம் கூடங்குளம் தகவல் திருட்டில் வட கொரியாவுக்கு தொடர்பு?: அணுசக்தி துறை மவுனம்

நெல்லை: கூடங்குளம் அணுமின்  நிலைய கம்ப்யூட்டர்களை தாக்கி தகவல்களை திருடியதில் வட கொரியாவுக்கு தொடர்பு இருப்பதாக தென் கொரிய உளவு நிறுவனம் சந்தேகம் தெரிவித்துள்ளது. இதனால் கூடங்குளம் விவகாரத்தில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.நெல்லை  மாவட்டம்,  கூடங்குளத்தில்  இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தலா 1000 மெகாவாட்  உற்பத்தி திறன்  கொண்ட 2 அணு உலைகள்  அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து  வருகிறது.   இந்நிலையில் அணுமின் நிலையம் தொடர்பான  ரகசிய தகவல்களை இணையதளம் வழியாக வடகொரிய  ஹேக்கர்கள்  ஊடுருவி திருடி விட்டதாகவும், தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள்  திருடு போனதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இதை கூடங்குளம் அணுமின் நிலைய பயிற்சி கண்காணிப்பாளர் மற்றும் தகவல் அலுவலர்   ராம்தாஸ் மறுத்தார். ஆனால் மறுநாளே இந்திய அணுசக்தி கழக கூடுதல்  இயக்குநர் ஏ.கே.நீமா, இந்திய அணுசக்தி  கழக இணையதள தொடர்பில் தாக்குதல் நடந்தது உண்மை தான் என ஒப்புதல் தெரிவித்தார். இதனால் கூடங்குளம் விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில் கூடங்குளம் தகவல்களை வட கொரியா திட்டமிட்டு திருடி விட்டதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த உளவு அமைப்பு இதை கூறியுள்ளது. அதாவது, இந்தியாவில் தற்போதுள்ள அணு உலைகள் யுரேனியத்தை எரிபொருளாக பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நவீன கன நீர் அணு உலை தொழில்நுட்பத்தை இந்தியா 2020ல் செயல்படுத்தும் என மத்திய அணுசக்தி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் கூறியிருந்தார். இந்தியாவில் தோரியம் அதிகமாக கிடைக்கிறது. எனவே தோரியத்தை பயன்படுத்தி நவீன கன நீர் உலை தொழில்நுட்பம் (AHWR - Advanced Heavy Water Reactor) மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தோரியத்தை எரிபொருளாக பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் அணு உலைகள் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை சார்ந்ததாகும். இதன் மூலம் இந்தியாவின் அணுசக்தி கணிசமான அளவு அதிகரிக்கும். எனவே இந்த நவீன அணு உலை ெதாழில்நுட்பத்தை வட கொரியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் திருட முயற்சித்ததாக தென் கொரிய உளவு அமைப்பு கூறியுள்ளது.சமூக வலைதளங்களில் இந்த தகவல் வெளியாகி வரும் நிலையில் அணு சக்தி துறை உயர் அதிகாரிகள் யாரும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை. அணுசக்தி துறை உயர் அதிகாரிகளின் மவுனத்தால் கூடங்குளம் விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

எந்த கம்ப்யூட்டரையும் ஹேக் செய்ய முடியும்

முன்னாள் அணுசக்தி ஆணையத் தலைவரும் முன்னாள் பாபா அணுசக்தி நிலைய இயக்குநருமான அனில் ககோட்கர் மற்றும் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ஏ.பரத்வாஜ் உள்ளிட்ட அணு விஞ்ஞானிகளை வட கொரிய ஹேக்கர்கள் குறிவைத்ததாக தென் கொரியாவைச் சேர்ந்த இஸ்யூ மேக்கர்ஸ் லேப் ஆய்வகம் (ஐ.எம்.எல்) கூறியது. இந்த குழு மேலும் கூறுகையில், “ வட கொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்களில் ஒருவர் அந்நாட்டின் பியாங்யாங் நகரில் இயங்கும் கணினியைப் பயன்படுத்தி இந்த செயலில் ஈடுபட்டிருக்கிறார். இதன்மூலம் ஹேக்கர்கள் இந்தியாவின் அணுசக்தி துறையில் உள்ள எந்த கம்ப்யூட்டரையும்  ஹேக் செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளது.

ஐ.எம்.எல் நிறுவனர் சைமன் சோய் கூறுகையில், நாங்கள் 2008 முதல் வட கொரிய ஹேக்கர்களை கண்காணித்து வருகிறோம். இந்திய அணுசக்தி துறை கம்ப்யூட்டர்களில் வடகொரிய ஹேக்கர் தாக்குதல் நடத்தியதும் எங்கள் கண்காணிப்பில் தெரியவந்தது என்றார். அடுத்த தலைமுறை அணு உலைக்கான இந்திய வடிவமைப்பான மேம்பட்ட கனரக நீர் உலையின் (AHWR) சமீபத்திய தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை வட கொரியாவின் கிம்சுகி குழு திருட முயன்றதாக ஐ.எம்.எல் கடந்த ஏப்ரல் மாதமே ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: