‘இதையெல்லாம் விட்டுட்டீங்களே’ பிரதமர் மோடி குறித்து ப.சிதம்பரம் விமர்சனம் : திருவள்ளுவர் விவகாரத்திலும் கண்டனம்

புதுடெல்லி: ‘இந்தியாவில் சரிந்து வரும் முதலீடுகள், வளர்ச்சி, கடன் வழங்குதல் மற்றும் தொழில் நம்பிக்கைகள் பற்றி எல்லாம் பாங்காக்கில் பிரதமர் மோடி பேசாமல் விட்டு விட்டாரே’ என ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். தாய்லாந்தின் பாங்காக்கில் நடந்த ஆசியான் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் வளர்ந்து வரும் மற்றும் சரிந்து வரும் விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். அந்நிய நேரடி முதலீடு, எளிதாக தொழில் செய்தல், உற்பத்தி ஆகியவை அதிகரித்திருப்பதாகவும், வரி விகிதங்கள், ஊழல், பல்வேறு விதிமுறைகள் குறைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இது குறித்து, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது குடும்பத்தினர் மூலமாக டிவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘பாங்காக்கில் பிரதமர் மோடி பேசிய வளரும் விஷயங்கள், சரியும் விஷயங்கள் பட்டியல் முழுமை அடையவில்லை. முதலீடு, ஒட்டு மொத்த துறைகளின் வளர்ச்சி, தொழில்துறைக்கான கடன், நுகர்வோர் தேவை, தொழில் நம்பிக்கை போன்றவை சரிந்து விட்டதையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். மேலும், வேலையில்லா திண்டாட்டம் 8.5 சதவீதத்தை எட்டியிருப்பதையும், கடந்த 3 ஆண்டில் வழங்கப்பட்ட புதிய கடன்கள் வராக்கடன்களாக மாறிக் கொண்டு வருவதையும் அவர் கூறியிருக்க வேண்டும்,’ என கூறி உள்ளார்.

மேலும், காவி உடையில் திருவள்ளுவர் படம் வெளியிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழில் அவர் எழுதிய டிவிட்டில், ‘தமக்கு ஒருநாள் காவி உடை தரிப்பார்கள் என்று உணர்ந்தே திருவள்ளுவர் ஒரு குறளை இயற்றினார் என்று தோன்றுகிறது. ‘நாணாமை நாடாமை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்’ - குறள் 833. பழி பாவங்களுக்கு வெட்கப்படாமையும், நன்மையானவற்றை நாடாமையும், அன்பு இல்லாமையும், நன்மையானவற்றை விரும்பாமையும் பேதையின் தொழில்கள்,’ என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories: