சென்னை: வெங்காய விளைச்சல் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள தற்காலிக வெங்காய விலை உயர்வு குறித்து, முதலமைச்சரின் உத்தரவின்பேரில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் 10 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக சில்லரை விற்பனையாளர்களும், 50 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக மொத்த விற்பனையாளர்களும், வெங்காயம் கையிருப்பு வைத்திருந்தால் அவர்கள் மீதும், அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் சென்னையில் உள்ள நுகர்பொருள் வழங்கல்துறை உதவி ஆணையர்கள் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுப் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.