சட்டீஸ்கர் அரசு ஒட்டுகேட்பு விவகாரம் தனிநபர் சுதந்திரத்தை விட்டு வைக்க மாட்டீர்களா?: உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி:  செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில், ‘‘யாருடைய தனிநபர் சுதந்திரத்தையும் விட்டு வைக்க மாட்டீர்களா’’ என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2015ல் பாஜ ஆட்சியில் பொது விநியோக திட்டத்தில் நடத்த ஊழலை விசாரித்த பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு டிஜிபி முகேஷ் குப்தா மற்றும், எஸ்பி ராஜ்னேஷ் சிங் ஆகிய இரு ஐபிஎஸ் அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்கள், சில அரசியல் புள்ளிகளை காப்பாற்ற சதி செய்ததாகவும், சட்டவிரோதமாக தொலைபேசிகளை ஒட்டு கேட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக, முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது.

இதற்கிடையே, தனது செல்போனும் தனது மகள்களின் செல்போனையும் மாநில அரசு ஒப்பு கேட்பதாக ஐபிஎஸ் அதிகாரி முகேஷ் குப்தா  தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘தொலைபேசியை ஒட்டு கேட்க வேண்டிய அவசியம் என்ன? யாருடைய தனிநபர் சுதந்திரத்தையும் விட்டு வைக்க மாட்டீர்களா? இப்படியும் கூடவா தனிநபர் சுதந்திரத்தை மீற முடியும்? இதற்கு உத்தரவிட்டது யார்? சட்டீஸ்கர்அரசு  விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மறு உத்தரவு வரும் வரை மனுதாரர் மீது கைது உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது’’ என கடும் கண்டனம் தெரிவித்தனர்.

Related Stories: