திருவள்ளுவர் சிலை அவமதிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது : மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக தலைவரும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கொளத்தூர் 64வது வார்டு திருவீதியம்மன் கோயில் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 160 மாணவர்களுக்கு வாட்டர் பாட்டில், நோட்டு-புத்தகம், கல்வி உபகரணங்கள் மற்றும் பள்ளிக்கு மேஜை, நாற்காலிகளும் வழங்கினார். இதையடுத்து, யமுனா நகர் மக்களின் குறைகளை ஸ்டாலின் கேட்டறிந்தார். அஞ்சுகம் நகரில் அமைந்துள்ள 3 பூங்காக்களை பார்வையிட்டு சீரமைப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 64வது வார்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் அறைகள் அமைக்க கட்டுமான பணிக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

கொளத்தூர் வெங்கடேஷ்வரா நகரில் உள்ள முன்னாள் வட்ட செயலாளர் அரசுமணியின் தாய் மேரி மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். காமராஜர் தெருவில் பழுதடைந்த சாலைகளை பார்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். ஹரிதாஸ் தெருவில் சீரமைக்கப்பட்ட தாமரைக்குளத்தில் 19 சிசிடிவி கேமரா பொருத்த 1.35 லட்சம் நிதியை ஸ்டாலின் வழங்கினார். அகரம் பகுதியில் கடந்த மழையின்போது சுரேஷ்-நிர்மலா ஆகியோரின் வீடு இடிந்து விழுந்ததில் அவர்களது மகன் தனுஷ் காயமடைந்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், 66வது வார்டில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அங்குள்ள நோயாளிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். இதைத்தொடர்ந்து சட்டமன்ற அலுவலகத்தில் பெறப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஸ்டாலின் வழங்கினார். இதில், 5 பேருக்கு ரிக்‌ஷா வண்டி, 3 பேருக்கு தள்ளுவண்டி, 12 பெண்களுக்கு தையல் இயந்திரம், காது கேட்கும் கருவிகள், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, 50 பேருக்கு மூக்கு கண்ணாடிகளை வழங்கினார்.

இதையடுத்து நிருபர்களுக்கு ஸ்டாலின் அளித்த பேட்டி: தஞ்சாவூரில் நேற்று காலை திருவள்ளுவர் சிலையை சாய்த்து அசிங்கப்படுத்தி பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நேற்றுமுன்தினம் பாஜ தனது முகநூலில் திருவள்ளுவர் சிலைக்கு காவி வண்ணம் பூசி உள்ளனர். தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கும், பாஜ தனது முகநூலில் திருவள்ளுவர் சிலைக்கு காவி வண்ணம் பூசியதற்கும் தொடர்பு இருக்குமோ என சந்தேகம் எழுகிறது. இதற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும். அரசியல் கட்சி தலைவர்களின் வாட்ஸ்அப் தகவல்களை உளவு பார்த்ததாக செய்தி வெளிவந்துள்ளது. இதற்கு நான் மட்டுமல்ல, அனைத்து அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உரிய விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார். இந்த ஆய்வின்பணியின்போது, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எம்எல்ஏக்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ரங்கநாதன், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கிரிராஜன், கொளத்தூர் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன் மற்றும் தேவஜவகர் உடனிருந்தனர்.

காய்கறி, வெங்காயம் விலை உயர்வுக்கு கண்டனம்

திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அனைத்து காய்கறிகளையும் போல, வெங்காயமும் மிக மிக அத்தியாவசியமானது. அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது, சாமானிய மக்களுக்குப் பெரிதும் சிரமம் ஏற்படுத்தும். அத்தியாவசியப் பொருள்கள் சிரமமின்றிக் கிடைக்கச் செய்வதும்-அதன் விலைகள் அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்வதும் அரசின் கடமை! இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டும்

திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது, திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது-தஞ்சை, பிள்ளையார்பட்டியில் அவரது சிலையை அவமானப்படுத்துவது என, தமிழுக்காகப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகிவிட்டது. இதற்காக, காவல்துறையை கையில் வைத்திருக்கும் அதிமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்! இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: