ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் மீண்டும் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல்: ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீ நகர் மார்க்கெட் பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்கியதில் ஒருவர் பரிதமாகபாக உயிரிழந்தார். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் 2வது முறையாக இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கையெறி குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்ற பயங்கரவாதிகளை இந்தியா ராணுவம் தேடி வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் இதே பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில், இன்று மதியம் சரியாக 1.20 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், ஒருவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 15 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரின் நிலை மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு 370-ஐ ரத்து செய்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது.

மேலும் மாநிலமாக இருந்த ஜம்மு -காஷ்மீர், ஜம்மு, லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்த அறிவிப்பு கடந்த அக்டோபர் 31-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. அதாவது, ஜம்மு, லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் அன்று முதல் செயல்பட தொடங்கின. மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றுவதன் மூலம், ஆட்சி நிர்வாகத்தை தமது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் எனவும், அதன் மூலம் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டலாம் என்பது மத்திய அரசின் நோக்கமாக இருந்தது. ஆனால், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே கடும் மோதல் போக்கு எழுந்துள்ளது.

இந்திய எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் இருப்பதாக உளவுத்துறைக்கு வந்த எச்சரிக்கையின் பேரில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும், பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா ஆகிய 2 பயங்கரவாத அமைப்புகள் விரைவில்  தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்றும் வரும் குளிர்காலத்தில் இந்த தாக்குதலை மேற்கொள்ள உள்ளது எனவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து எல்லைப்பகுதிகளிலும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளிலும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு  வருகிறது. கூடுதல் பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஸ்ரீநகர் மார்க்கெட்டில் 2வது முறையாக பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Related Stories: