தியோதர் கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்தியா பி-இந்தியா சி : வெளியறேியது இந்தியா ஏ

ராஞ்சி: தியோதர் கோப்பை தொடரின் 2வது லீக் போட்டியில் இந்தியா பி 232 ரன் வித்தியாசத்தில் வென்றதை அடுத்து, தொடர்ச்சியாக 2 தோல்விகளை சந்தித்த இந்தியா ஏ அணி பரிதாபமாக வெளியேறியது. இறுதிப் போட்டியில் இந்தியா பி - இந்தியா சி அணிகள் மோதுவது உறுதியாகி உள்ளது. தியோதர் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டியில் நேற்று இந்தியா சி - இந்தியா ஏ அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா சி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்கள்  மயாங்க் அகர்வால், கேப்டன் ஷுப்மான் கில் முதல் விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடி 38.3 ஓவரில் 226 ரன் சேர்த்தனர். அபாரமாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர்.  அகர்வால் 120 ரன் (111 பந்து, 15 பவுண்டரி, 1 சிக்சர்), பிரியம் கார்க் 16 ரன், ஷுப்மான் கில் 143 ரன் (142 பந்து, 10 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 24 பந்தில் அரைசதம் அடித்தார்.

 

இந்தியா சி அணி 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 366 ரன் குவித்தது. சூர்யகுமார் 72 ரன் ( 29 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா ஏ தரப்பில்  அஷ்வின், ஹனுமா விகாரி, ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அடுத்து 367 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன்  களமிறங்கிய இந்தியா ஏ அணி 29.5 ஓவரில் 134 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தேவ்தத் படிக்கல் 31, பார்கவ் மெராய் 30, இஷான் கிஷன் 25, சித்தார்த் கவுல் 17 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இந்தியா சி அணி பந்துவீச்சில்  ஜலஜ் சக்சேனா 9.5 ஓவரில் 41 ரன் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றினார்.  இஷான் போரெல் 2, தவால் குல்கர்னி 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா சி அணி 232 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இந்தியா ஏ அணி முதல் லீக் போட்டியில்  இந்தியா பி அணியிடம் 108 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அடுத்து 2வது லீக் போட்டியிலும் தோற்றதை அடுத்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இந்தியா பி -இந்தியா சி அணிகள் 4ம் தேதி நடக்கும் பைனலில் விளையாட தகுதி பெற்றுள்ள நிலையில், அதற்கு ஒத்திகையாக இன்று கடைசி லீக் ஆட்டத்தில் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

Related Stories: