நீர் மேலாண்மை குறித்து அறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் இஸ்ரேல் பயணம் : டெல்லியில் அமைச்சர் எம்சி சம்பத் தகவல்

புதுடெல்லி : டெல்லியில் நடைபெற்ற `மேக் இன் இந்தியா’ திட்ட கருத்தரங்கில் பங்கேற்க சென்றிருந்த தமிழக வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் எம்சி சம்பத் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இஸ்ரேல் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பத்தால் அங்கு அதிக அளவில் வேளாண் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த நாடு, நீரின் உப்புத்தன்மையை குறைத்தல் மற்றும் நீர் மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது. வீடுகளில் பயன்படுத்தப்படும் நீரில் 80 சதவீதம் அளவு நீர் மறுசுழற்சி செய்யப்பட்டு தோட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. மொத்த நீரில் 50 சதவீத அளவுக்கு வேளாண்மைக்கு பயன்படுத்தப்படுகிறது.

எனவே அந்த நாட்டில் பயன்படுத்தப்படும நீர்மேலாண்மை தொடர்பாக ஆய்வு செய்யவும், அங்கு பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்ளவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்தரங்கில் அமைச்சர் சம்பத் பேசியதாவது: நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகளவு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. எனவே இதை ஊக்கப்படுத்தும் வகையில் வரும் 2023ம் ஆண்டு வரை தமிழகத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். குறிப்பிட்ட துறை சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தை பல்துறை சிறப்பு பொருளதார மண்டலங்களாக்கி முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்றார்.

Related Stories: