பயன்படாத ஆழ்துளை கிணறுகளை 24 மணி நேரத்துக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற வேண்டும்: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அதிரடி

சென்னை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் போடப்பட்டு, பயன்படாத ஆழ்துளை கிணறுகளை 24 மணி நேரத்துக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற வாரிய பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித் இறந்தான். இந்நிலையில், பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை முறைப்படி மூடாமல் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணறு ஆகியவை செயல்படாமல் இருந்தால் அவை பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இதில் குழந்தைகள், ஆடு, மாடு ஆகியவை விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதை உடனடியாக மூட வேண்டும். தவறும் பட்சத்தில் வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்படுகிறது.

மழைநீரை சேகரிக்கவும், நீராதாரத்தை கண்டறியும் நோக்கத்துடன் புவி பவுதீக வரைபடம் ஒன்றை தயாரித்து மாவட்ட ஆட்சி தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மாவட்ட நிலையில் உள்ள நிர்வாகப் பொறியாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்புக்காக இணையதளம், முகநூல் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், சமூகப் பொறுப்புக் குழுமங்கள் ஆகியோர் இயங்காத மற்றும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளாக மாற்றுவதற்கு எந்த வகையான தொழில்நுட்ப உதவிகளையும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.  இதற்கு எங்கள் வாரிய அலுவலர்கள் முதன்மையாக உதவி செய்வார்கள். மேலும் இதுபற்றிய விவரம் குடிநீர் வடிகால் வாரிய இணையதளத்தில் உள்ளது. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசரத் தகவல்கள் பெறும் மையத்தை 94458 02145 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: