விவசாயிகளின் வருமானம் பெருக புதிய சட்டம்: குடியரசு தலைவர் ஒப்புதல்

சென்னை: தமிழக விவசாயிகளின் வருமானம் பெருக தமிழக அரசு இயற்றிய புதிய சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்) 2019க்கான சட்ட முன்வடிவை கடந்த 14.2.2019 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் வைத்து, அதற்கான ஒப்புதல் பெறப்பட்டது. தமிழ்நாடு அரசு இயற்றிய இந்த சட்டத்திற்கு தற்போது இந்திய குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, கொள்முதலாளர் அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் விவசாயிகள் அல்லது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தங்களது விளைபொருட்கள் அல்லது கால்நடைகள் அல்லது அதிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை, ஒப்பந்தம் செய்த அன்று நிர்ணயம் செய்த விலையிலேயே பரிமாற்றம் செய்வதற்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு இந்த சட்டத்தை இயற்றியுள்ளது.

அதிக விளைச்சல் காரணமாக, விலை வீழ்ச்சி ஏற்படும் நேரங்களில், விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகின்றனர். இந்த சட்டத்தினால், விவசாயிகளுக்கு எந்தவித பொருள் மற்றும் பண இழப்பும் ஏற்படாமல், முன்னரே ஒப்பந்தம் செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த பண்ணைய சட்டத்தில், கொள்முதலாளரோ அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனமோ ஒப்பந்த விதிகளை மீறும்போது, விவசாயிகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களைந்து, விவசாயிகளின் விளைபொருட்களுக்குரிய தொகையைப் பெற்றுத்தரும் வகையில், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் இந்த சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்த பண்ணைய சட்டத்தை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான சட்ட விதிகளை உடனடியாக வகுத்து, முழு செயலாக்கத்திற்கு கொண்டு வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேளாண்மை துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: