வார்னர் 100*, பிஞ்ச் 64, மேக்ஸ்வெல் 62 134 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி

அடிலெய்டு: இலங்கை அணியுடன் நடந்த முதல் டி20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி 134 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.அடுலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது. ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்களாக கேப்டன் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் களமிறங்கினர்.  அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.5 ஓவரில் 122 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது.பிஞ்ச் 64 ரன் (36 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சந்தகன் பந்துவீச்சில் குசால் மெண்டிஸ் வசம் பிடிபட்டார். அடுத்து வார்னர் - மேக்ஸ்வெல் இணைந்து இலங்கை பந்துவீச்சை சிதறடிக்க, ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் எகிறியது.  இருவரும் 2வது விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்து மிரட்டினர்.மேக்ஸ்வெல் 62 ரன் (28 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஷனகா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் குசால் பெரேராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வார்னர் சதத்தை நிறைவு செய்ய, ஆஸ்திரேலியா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 233  ரன் குவித்தது. வார்னர் 100 ரன் (56 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்), டர்னர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 99 ரன் மட்டுமே எடுத்து 134 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஷனகா அதிகபட்சமாக 17 ரன் எடுத்தார். குசால் பெரேரா 16, ஒஷதா பெர்னாண்டோ 13,  குணதிலகா 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். கேப்டன் லசித் மலிங்கா 13 ரன், நுவன் பிரதீப் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.ஆஸி. பந்துவீச்சில் ஆடம் ஸம்பா 3, ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 2, ஏகார் 1 விக்கெட் வீழ்த்தினர். தனது 33வது பிறந்த நாளில் சதம் விளாசி அசத்திய வார்னர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸி.  அணி 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 போட்டி பிரிஸ்பேனில் நாளை நடக்கிறது.

Related Stories: