உபி.யில் நள்ளிரவில் பரபரப்பு பசு கடத்தல் கும்பல் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு: 3 பேர் காயம்

நொய்டா: உத்தரப் பிரதேசத்தில் பசுக்களை கடத்திய கும்பல் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயமடைந்தனர். உத்தரப் பிரதேசத்தில் ஜார்சா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சவுனா கிராமத்தில், நேற்று முன்தினம்  நள்ளிரவில் பசு, எருமைகளை மர்ம கும்பல் சட்ட விரோதமாக கடத்தி சென்றது. இது குறித்து ஜார்சா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடேன, ஹபூர் மாவட்ட எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,  கால்நடைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது, வாகனத்தில் இருந்தவர்கள் போலீசார் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடியாக, கும்பல் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.  இதில், 3 பேர் காயமடைந்தனர். மற்ற 3 பேர் தப்பினர்.

காயத்துடன் பிடிபட்ட 3 பேரும் ஹபூர் மாவட்டத்தில் உள்ள தவுலான பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட பசு,  எருமைகள், ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கால்நடை கடத்தல்காரர்களுக்கும், போலீசாருக்கும் நடத்த துப்பாக்கிச் சண்டையால் இம்மாநிலத்தில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: