கர்நாடகா எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு: தீபாவளிக்குப் பிறகு வெளியாக வாய்ப்பு

பெங்களூரு: கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை முடித்துள்ள உச்சநீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.  கர்நாடகாவில் காங்கிரஸ்-  மஜத கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. இதை பாஜ கவிழ்த்தது. இதற்காக, இக்கட்சிகளை சேர்ந்த 18 எம்எல்ஏ.க்களை வளைத்து போட்டது. இதனால், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. முன்னதாக, கொறடா உத்தரவை  மீறியதாக 17 எம்எல்ஏ.க்களின் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ் தரப்பில் சித்தராமையாவும், மஜத தரப்பில் குமாரசாமியும் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர். அதை பரிசீலனை செய்த அப்போதைய  சபாநாயகர் ரமேஷ் குமார் 17 எம்எல்ஏக்களின் பதவியை பறித்து நடவடிக்கை எடுத்ததுடன் பதவி பறிக்கப்பட்ட அனைவரும் வரும் 2023ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பதவி இழந்த 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய் ரஸ்தோகி மற்றும் கிருஷ்ணாமூராரே ஆகியோர் அடங்கிய அமர்வு  விசாரித்து வந்தது. 17  பேரின் சார்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, அபிஷேக் மானு சிங்வி, சச்சின் பூவையா, வி.கிரி உள்பட சிலர் ஆஜராகி வாதம் செய்தனர். முன்னாள் பேரவை தலைவர் சார்பில் வக்கீல் தேவதத்த காமத், முன்னாள் முதல்வர்  சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல், முன்னாள் முதல்வர் குமாரசாமி சார்பில் மூத்த வக்கீல் ராஜீவ் தவான் ஆகியோர் ஆஜராகி வாதம் செய்தனர். இந்திய தலைமை  தேர்தல் ஆணையம் மற்றும் தற்போதைய கர்நாடக சட்டபேரவை தலைவர் அலுவலகம் சார்பிலும் வக்கீல்கள் ஆஜராகி வாதம் செய்தனர்.

வக்கீல்கள் வாதம் முடிந்ததை தொடர்ந்து தீபாவளி விடுமுறைக்கு பின் தீர்ப்பு வழங்குவதாக நீதிபதிகள் கூறி வழக்கை ஒத்தி வைத்தனர். நீதிபதிகள் வழங்கும் தீர்ப்பில்தான் இந்த 17 பேரின் அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்பது  குறிப்பிடத்தக்கது

Related Stories: